வெளிநாடுகளிலும் பெர்சே 3.0 பேரணிகள்

கோலாலம்பூரில் நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணிக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர்.

டத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் 100,000க்கும் மேற்பட்டவர்கள் திரண்ட வேளையில் உலகம் முழுவதும் 35 நாடுகளில் உள்ள 85 நாடுகளில் மலேசியர்கள் ஒன்று கூடி  பெர்சே 3.0டன் தங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொண்டனர்.

மெல்பர்னில் உள்ள கூட்டரசு சதுக்கத்தில் 1,200 பேர் கூடினர். சிட்னியில் உள்ள மார்ட்டின் மய்யத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.

மெல்பர்ன் பேரணியில் இசை நிகழ்ச்சிகளும் பேச்சுக்களும் இடம் பெற்றன.

“வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் மலேசியத் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் வெளிநாடுகளில் வேலை செய்யும் அரசாங்க அதிகாரிகளும் முழு நேர மாணவர்களும் இராணுவ அதிகாரிகளும் மட்டுமே வாக்களிக்க முடியும்,” என மெல்பர்ன் அனைத்துலக பெர்சே ஒருங்கிணைப்பாளர் டேவிட் தியோ ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பன், ஹோபார்ட், கேன்பெரா ஆகியவற்றிலும் பேரணிகள் நடத்தப்பட்டன.

நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் மலேசிய நேரப்படி பிற்பகல் ஒரு மணிக்கு கூடிய மலேசியர்கள் தேசிய கீதமான நெகாரா கூ-வை பாடினர்.

ஹாங்காங்கில் காஸ்வே பே-யில் கூடிய 400 பேர் மலேசியத் தூதரகப் பேராளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அமெரிக்காவிலும் கனடாவிலும் இன்று பின்னேரத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.