பிகேஆர்: பெர்சே பேரணியின் போது ஊடகங்கள் தாக்கப்பட்டதற்கு நஜிப் பொறுப்பேற்க வேண்டும்

நேற்று நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி குறித்த செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட “முன்பு எப்போதும் நிகழ்ந்திராத” தாக்குதல்களுக்கும் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் பிகேஆர் பிரதமரைச் சாடியுள்ளது.

“போலீஸ் படை திட்டமிட்டும் வேண்டுமென்றே பத்திரிக்கையாளர்களைத் தாக்கியுள்ளது என்பது வெள்ளிடைமலை,” என அது கூறியது.

“போலீஸ் தலைமைத்துவம், உள்துறை அமைச்சு ஆகியவற்றும் உத்தரவு இல்லாமல் அத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்க முடியாது,” என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் இன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.

“பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள அந்த கிரிமினல் நடவடிக்கைகளுக்கு பிரதமர் நஜிப்பும் அவரது அரசாங்கமும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்,” என்றார் அவர்.

நேற்று கோலாலம்பூரில் டாத்தாரான் மெர்தேக்காவில் பேரணி பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்த மலேசியாகினி நிருபர் கோ ஜுன் லின் உட்பட பல நிருபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தப் பேரணி தொடர்பான படங்களைக் கொண்டிருந்த கோவின் கேமிரா நினைவு கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. குழப்பம் மீதான படங்களை அழிக்க மறுத்ததற்காக தமது நினைவு கார்டை போலீசார் நாசப்படுத்தி விட்டதாக இன்னொரு நிருபர் சொன்னார்.