குழப்பத்தைத் “தூண்டி விட்டதாக” அஸ்மின், அன்வார் மீது பத்திரிக்கைகள் பழி போடுகின்றன

நேற்று நிகழ்ந்த மோதல்களின் போது சேதமடைந்த போலீஸ் காரின் படங்கள் இன்றைய ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற பெர்சே 3.0 பேரணி வன்முறையில் முடிந்ததற்கு இரண்டு முக்கிய நாளேடுகள் பிகேஆர் தலைவர்களே காரணம் எனச் சுட்டிக் காட்டின.

டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறுமாறு கூட்டத்தினரை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமும் துணைத் தலைவர் அஸ்மின் அலியும் ‘தூண்டி விட்டதாக’ மலாய் நாளேடான மிங்குவான் மலேசியாவும் ஆங்கில மொழி ஏடான சண்டே ஸ்டாரும் கூறின.

தேசியப் பள்ளிவாசலில் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேசிய அன்வார், “என்ன நடந்தாலும் டாத்தாரானுக்கு செல்லுங்கள்” என கூறியதாக சண்டே ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. என்றாலும் அஸ்மின் ஆற்றிய சொற்பொழிவு கூட்டத்தினருடைய மனநிலையை மாற்றி விட்டதாக அது தெரிவித்தது.

‘நீங்கள் டாத்தாரான் மெர்தேக்காவை ஆக்கிரமிக்க விரும்பினால்’ என ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பிகேஆர் துணைத் தலைவருமான அஸ்மின் அலி வினவிய பின்னர் கூட்டத்தினர் கட்டுக்கு அடங்காமல் போய் விட்டனர் என நம்பப்படுகிறது.”

“அவரது கேள்விக்கு “hancur rempuh, buka pagar” ( மோதி நாசப்படுத்துங்கள், வேலியைத் திறவுங்கள்) என பதில் அளிக்கப்பட்டது என சண்டே ஸ்டார் குறிப்பிட்டது.

கலைந்து செல்லுமாறு பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்ட பின்னர் அது நிகழ்ந்ததாகவும் அந்த ஏடு குறிப்பிட்டது.

“அன்வார் ஜாலான் ராஜாவை அடைந்த பின்னர் கூட்டத்தினரிடம் உரையாற்றிய வேண்டிய தருணத்தில் பெரிய கும்பல் ஒன்று தடுப்புக்களை உடைத்துக் கொண்டு சதுக்கத்தை நோக்கி சென்றது.”

இதனிடையே டாத்தாரானை என்ன  விலை கொடுத்தாவது “எடுத்து” கொள்ளப்பட வேண்டும் என பாஸ் கட்சி அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தனது உறுப்பினர்களுக்கு கூறியதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது என மிங்குவான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய நாளேடுகள் அந்தப் பேரணி தொடர்பான செய்திகளில் பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் நிகழ்ந்த வன்முறைகள் பற்றி முக்கியக் கவனம் செலுத்தியுள்ளன.

சேதமடைந்த சொத்துக்கள், குப்பை கூளங்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது பொருட்களை வீசுவதாகக் கூறப்படுவது, சேதமடைந்த போலீஸ் வாகனங்கள் ஆகியவற்றைப் பெரும்பாலான படங்கள் காட்டின.