துணைப் பிரதமர்: குழப்பத்துக்குப் பெர்சே பொறுப்பேற்க வேண்டும்

நேற்று சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் பெர்சே ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாத்தாரான் மெர்தேக்காவுக்குப் பதில் மெர்தேக்கா அரங்கத்தில் தங்கள் பேரணியை அவர்கள்நடத்துவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் நிராகரித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

தி ஸ்டார் நாளேடு அவரது செய்தியை வெளியிட்டுள்ளது.

“ஏற்பாட்டாளர்கள் என்னும் முறையில் அவர்களே பொறுப்பேற்க வேண்டும்,” என அவர் இன்று நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டது.

நேற்று போலீசாருக்கும் சில ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்கள் “வழக்கத்துக்கு மாறானவை” என்றும் “தூண்டப்பட்டிருக்கலாம்” எனச் சந்தேகிப்பதாகவும் பெர்சே கூறியது.

இதனிடையே பெர்சே 3.0 பேரணியின் போது போலீசார் நடந்து கொண்ட “தொழில் முறைக்கு மாறான” “வன்முறையான” நடத்தைக்கு அம்னோவும் பிஎன்-னும் பொறுப்பேற்க வேண்டும் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவு கூறுகிறது.

“கோலாலம்பூரைச் சுற்றிலும் நேற்று நிகழ்ந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தை கையாளும் போது போலீசார் காட்டிய வன்முறையையும் எடுத்த மித மிஞ்சிய நடவடிக்கையையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்,” என சிலாங்கூர் பாஸ் இளைஞர் தலைவர் ஹாஸ்புல்லா முகமட் ரிட்சுவான் விடுத்த அறிக்கை கூறியது.