சன் ஏட்டின் நிருபர் நெஞ்சு எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்

கோலாலம்பூரில் நேற்று நிகழ்ந்த பேரணிக்கு பின்னர் சன் நாளேட்டின் நிருபர் ஒருவர் நெஞ்சு எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உட்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

ராட்ஸி ரசாக் என்ற அந்த நிருபர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக அவரதுசகாவான அல்யா அல்ஹாட்ஜ்ரி கூறினார்.

“நான் இன்று பிற்பகல் மணி 12.30 வாக்கில் அங்கிருந்து புறப்பட்ட போது ராட்ஸிக்கு பல சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. வயிற்றுப் பகுதியில் அவருக்கு உட்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது,” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் சொன்னார்.

அவருக்கு எப்படி உட்காயங்கள் ஏற்பட்டன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் மாலை மணி 5.30 வாக்கில் ராட்ஸி நின்று கொண்டிருந்த பகுதியில் போலீசார் விரட்டிக் கொண்டிருந்தனர் என மலேசியாகினி நிருபர் சுலைக்கா சுல்கிப்லி கூறினார்.

ஜாலான் துன் பேராக்-ஜாலான் ராஜா லாவுட் சந்திப்பில் ராட்ஸி நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதே வேளையில் சுலைக்கா ஜாலான் துன் பேராக்-ஜாலான் ராஜா சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.

“போலீசார் ராட்ஸி  இருந்த பகுதியை நோக்கி சென்றதை நான் பார்த்தேன். அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நிறையக் காணப்படவில்லை. அடுத்து நான் வெள்ளை நிற உடையில் இருந்த யாரோ ஒருவர் தரையில் கிடந்ததைப் பார்த்தேன். ஒர் ஆம்புலன்ஸ் அங்கு நிறுத்தப்பட்டது,” என்றார் அவர்.

தாம் அந்த இடத்தை சென்றடைந்த போது ராட்ஸி தரையில் விழுந்து கிடந்ததாக மலேசியாகினி நிருபர் நைஜல் ஆவ் கூறினார். “அவருக்கு சுயநினைவு இல்லை என்றும் பலர் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்” என்றும் நைஜல் சொன்னார்.