மானியங்கள் இந்திய குத்தகையார்களுக்கு என்பதை வரவேற்கிறோம், சேவியர்

தமிழ்ப்பள்ளிகளின்  நிர்மாணிப்பு, சீரமைப்பு  இந்திய குத்தகையார்களுக்கே வாய்ப்புகள் எண்ணும் மஇகாவின் தேசிய தலைவர்  பழனிவேலுவின்  அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால்  அது அம்னே இடைத்தரகர்களிடமிருந்து விடுப்பட்டு ம.இகா இடைத்தரகர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் பள்ளி நிர்வாகங்களிடம்  நேரடியாக வழங்கப்பட வேண்டும். மேலும் இது ஒரு தேர்தல் கால அறிவிப்பாக இல்லாமல், இனி வருங்காலங்களில் இந்நடைமுறை  தொடர்ந்து பின் பற்றப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்துகிறோம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் கூறுகிறார்.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத்தில் பக்காத்தான் அரசின் அணுகுமுறைக்கும், பக்காத்தானை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் கிடைத்த  வெற்றி இது என்பதால் மிட்லண்ட்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தில் எங்களுக்கு  துணை நின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாரவர்.

மிட்லண்ட்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளியை முன்னுதாரணப் பள்ளியாக கட்டினோம், அதன் வெற்றி இந்தியச் சமுதாயத்திற்கு மூன்றே வாரத்தில் 10 கோடி வெள்ளிகளை வெகுமதியாக ஈட்டி தந்துள்ளது என்றால் மிகையாகாது. இதன்  உள்நோக்கங்கள் சில மர மண்டைகளுக்கு ஏறாது. சில நல்ல காரியங்களைப் பிற  மொழி பத்திரிக்கைகளில் வெளியிடும் பொழுது, அதற்கு அரசியல் மற்றும் இனச் சமய வர்ணங்கள் பூசி, நமது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையிடுவோர் நிறைய உண்டு என்பதை அவர் நினைவூட்டினார்.

மிட்லண்டஸ் தோட்ட தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தில்  முறைகேடு நடந்து விட்டது போன்றப் பீடிகைகள் போட்டு மற்ற மொழி பத்திரிக்கைகளுக்கும்,  மின்னியல் பத்திரிக்கைகளுக்கும்  செய்திகள் கொடுக்கும் இந்திய ஞானச் சூனியங்களை அடையாளங்கண்டு இந்தியச் சமுதாயம் வெறுத்து ஒதுக்க வேண்டிய தருணம் இது என்பதனை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ’’மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுத்தால் போதும்’’ என்னும் முது மொழிக்கு ஒப்ப, அப்படிப்பட்ட மனப்பான்மை உள்ளவர்கள் எவ்வளவு கொடியவர்கள் என்பதனை நாம் அறிவோம்..

அரசியல் மற்றும் சுய லாப நஷ்டங்களுக்காக நல்ல ஒரு சமுதாயத் திட்டத்தின் மீதும் அதை முன்னின்று  நடத்துவபர்கள் மீதும் புழுதி வாரி இறைப்பது சமூதாய கீழறுப்பு வாதமாகும். திறமையான பல நல்ல மனிதர்களின் சேவை சமுதாயத்திற்கு தொடர்ந்து கிடைக்காமல் செய்து விடுகிறவர்கள் படும்பாதகர்கள்.  தன் நலம் பார்க்காமல், பெரிய லாபம் பார்க்காமல் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே தமிழ்ப்பள்ளியை வெற்றிகரமாகக் கட்டிமுடித்துக் கொடுத்ததன் பயன், இன்று நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், தலைமை ஆசிரியர், தமிழ்ப்பள்ளி வாரியங்கள் விழிப்படைந்து விட்டன. பாரிசான் ஆட்சியில் ஆண்டாண்டு காலமாக மகஜர் கொடுத்த அலுத்துப்போய் விட்ட இச்சமுதாயம், இன்று தனக்கு இன்னது கொடுக்கப்பட வேண்டும் என்று கட்டளையிடத் தொடங்கி விட்டது என்று சேவியர் கூறினார்.

நமது பள்ளி திறப்பு விழா கண்ட முதல் வாரத்திலேயே, பிரதமர் அறிவித்த 100 கோடி வெள்ளி  மானியத்தை எடுத்துக்கொண்டு கெடா மாநில தமிழ்ப்பள்ளி நிர்வாகிகளைச் சந்தித்த மஇகாவின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ பழனிவேல் விரட்டப்பட்டார் என்றால் தவறில்லை. அதே நிலை மீண்டும்  சிலாங்கூரில் ஏற்பட்டது.  தமிழ்ப்பள்ளி நிர்வாகிகளுக்கு இது நன்றாகத் தெரியும்.. காரணம், பள்ளிகளை மத்திய அரசின் குத்தகையாளர்களை வைத்து ஒன்றும் பாதியுமாகச் செய்து முடித்துவிட்டு, மீதத்திற்கு நம் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மாணவர்களையும் நிதிக்கு வீதி-வீதியாக அலைய விடுவதை முதலில் நிறுத்த வேண்டும்  என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றிவிட்டது. அதனால் பள்ளிக்கு ஒதுக்கப்படும் மானியம் நேரடியாக தமிழ்ப்பள்ளிகளுக்கே வழங்கப்படவேண்டும் என்று ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பினர்.

கடந்த காலங்களில் பல கோளாறுகளுடன் கட்டிக் கொடுக்கப்பட்ட கட்டிடங்களை, கல்வி அமைச்சு அதிகாரிகளின் மற்றும் அரசியல்வாதிகளின் அதட்டல்களுக்குப் பயந்து ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பற்பல பிரச்சனைகளில் தமிழ்ப்பள்ளிகளை சீரழித்த  கலாச்சாரத்துக்கு விடை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் வெற்றியால் மற்ற பள்ளி பொறுப்பாளர்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. மானியத்தை  எங்களிடமே கொடுத்து விடுங்கள்; நாங்களே கட்டிக்கொள்கிறோம் என்று துணிச்சலாகக் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

எங்கள் நிபந்தனைகளை ஏற்று கொள்ளாவிடில் தமிழ்ப்பள்ளிக்கு மானியம் இல்லை, கட்டடம் இல்லை என்று நிலை மாறி,  எங்கள் கோரிக்கைகளை நீங்கள் ஏற்று கொள்ளவிடில் உங்களுக்கு எங்கள் வாக்குகள் இல்லை என்று நாம் துணிந்து சொல்லும் நிலைக்கு வந்துள்ளதற்கு யார் காரணம்? நீங்கள் எடுத்த முடிவு. மக்களின் பலம். உங்களின் தேர்வு சரியானது என்று ஊர்ஜிதப்படுத்த நாங்கள் பாடுப்பட்டு வருகிறோம். ஒரு பொறுப்பான நிர்வாகத்தின் வழி மக்களுக்கு இன்று ஒரு மாற்று தேர்வாக பக்காத்தான் அரசுகள் இருப்பதுதான் என்பதனை அரசியல் புரிந்த அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“இதே போன்று  மற்ற பல தொழில் துறைகளிலும், வேலை வாய்ப்புகளிலும், நாம் மேற்கொண்டு வரும் சில அணுகு முறைகளை அரசியல் காரணங்களுக்காக இரகசியமாக வைத்துள்ளோம். சரியான நேரத்தில் அதன் பயன் மக்களை வந்து சேரும். இவ்வேளையில் சமுதாய நலனுக்காக எங்களின் நல்ல பல திட்டங்களுக்குத் துணை நிற்கும் சில மஇகா  தலைவர்களுக்கும் முக்கியமானவர்களுக்கும் கூட மறக்காமல் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

TAGS: