நஜிப் சன் நிருபரிடம் ‘குறைந்த தொனியில்’ மன்னிப்பு கேட்டார்

சனிக்கிழமையன்று  ஏழு போலீஸ் அதிகாரிகளினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சன் நாளேட்டின் நிருபர் ராட்ஸி ரசாக்கிடம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ‘குறைந்த தொனியில்’ மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

“நான் நடந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என நஜிப் சொன்னதாக ராட்ஸி தெரிவித்தார்.

காயமடைந்த ராட்ஸியைக் காண்பதற்கு நேற்று கோலாலம்பூர் மருத்துவமனைக்குச் சென்ற நஜிப், அவரிடம் காதில் முணுமுணுத்ததைப் பார்க்க முடிந்தது.

நஜிப் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதற்குத் தாம் ‘ஆம்’ என்று மட்டும் பதில் சொன்னதாகவும் அந்த நிருபர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் அவர் தம்மைப் பார்ப்பதற்கு வந்த உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனிடம் அந்த விவகாரத்தை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

“நாங்கள் விசாரிக்க வேண்டும். நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன்,” என அமைச்சர் ராட்ஸியிடம் சொன்னது கேட்டது. ஹிஷாமுடின் பிரதமருக்கு முன்னதாக ராட்ஸியைச் சந்தித்தார்.