சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தின் போது பங்கேற்பாளர்கள் மீதான கட்டுப்பாட்டை ஏற்பாட்டாளர்கள் இழக்கவில்லை என பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிக்க போலீஸார் முடிவு செய்த பின்னரே வன்முறை மூண்டதாக அவர் சொன்னார்.
“எந்தத் தரப்பும் வன்முறையில் ஈடுபடுவதை பெர்சே கண்டிக்கிறது. பெர்சே 3.0 பேரணியில் பங்கு கொண்ட 250,000 பேரும் அமைதியாக வந்தனர். அவர்கள் வன்முறையில் இறங்குவதற்காக வரவில்லை.”
“வன்முறை எனக் கூறப்படும் எல்லாச் சம்பவங்களும் கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்ட பின்னரே நிகழ்ந்தன. அது வரையில் எங்களிடம் முழுக் கட்டுப்பாடு இருந்தது. அதற்கு பின்னர்எல்லாம் குழப்பமாகியது,” என்றார் அம்பிகா.
பேரணியின் போது பாதுகாப்புக்கு பொறுப்பாக அமால் பிரிவினர் உட்பட 6,000 பேரை பெர்சே பணியில் அமர்த்தியிருந்தது.
விசாரணை தேவை
அதனைக் கருத்தில் கொண்டு சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தின் போது நிகழ்ந்த சம்பவங்கள் மீது விசாரணையைத் தொடங்க வேண்டும் என அம்பிகா கேட்டுக் கொண்டார்.
1999ம் ஆண்டு ரிபார்மஸி இயக்கத்துக்குப் பின்னர் நிகழ்ந்துள்ள பெரிய பேரணி அதுவாகும்.
“அந்த வன்முறைகளுக்கு யார் பொறுப்பு என்பது மீது அடுத்தடுத்த நாட்களில் உங்களுக்கு உண்மை தெரிய வரும். முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம். அதனை விட எதுவும் குறைவாக இருக்கக் கூடாது,” என்றார் அவர்.
என்றாலும் டாத்தாரான் மெர்தேக்காவில் போடப்பட்டிருந்த தடுப்பை மீறிச் செல்வதற்கு சில ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்ற போது போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்திருக்கலாம் என்பதை அம்பிகா ஒப்புக் கொண்டார்.
“ஆனால் அது தேவையா? இவ்வளவு அதிகமான கண்ணீர் புகைக் குண்டுகள் தேவையா? அங்கு பலர் இருந்தனர். அது போன்ற கூட்டத்தை நோக்கி நீங்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிக்கும் போது மக்கள் நசுக்கப்படுவது திண்ணம். தகராறு மூளுவதும் உறுதி,” என்றார் அம்பிகா.
அந்த ஆர்ப்பாட்டத்தின் போது தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்ட ஏஜண்டுகள் ஊடுருவியிருக்கலாம் என பெர்சே-க்குத் தகவல் கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட அவர் கூடுதல் தகவல்களுக்காக தாங்கள் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.