டாத்தாரான் மெர்தேக்காவை நீண்ட காலத்துக்கு ஆக்கிரமிப்பதற்கான ரகசியத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்ததால் சனிக்கிழமை பெர்சே 3.0 பேரணிக்கு அந்தப் பொதுச் சதுக்கத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்தது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.
“நாட்டின் சுதந்தரத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக அது திகழ்வதுடன் நாங்கள் ஏற்பாட்டாளர்களின் நோக்கங்கள் குறித்தும் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ளோம். காரணம் அதனை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடிய தரப்புக்களும் உள்ளன.”
“டாத்தாரான் மெர்தேக்காவை தொடர்ச்சியாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவை திட்டமிட்டிருந்தன,” என கோலாலம்பூரில் நேற்றிரவு மாதாந்திர அம்னோ உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
அண்மைய ஆண்டுகளில் அத்தகைய சிவில் ஒத்துழையாமை நடவடிக்கைகள் வழக்கமான காட்சிகளாகி விட்டன என அவர் சொன்னார். எடுத்துக்காட்டுக்கு அமெரிக்காவில் வால் ஸ்டீரிட், எகிப்தில் தாஹ்ரிர் சதுக்கம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகாரிகளுடன் பதற்ற நிலைக்கு வழி வகுத்து விட்டன. சில சமயங்களில் வன்முறை மோதல்களும் நிகழ்ந்துள்ளன.
ஆகவே கடந்த வாரம் நீதிமன்றம் யாரும் செல்லக் கூடாது எனத் தடை விதித்த டாத்தாரானுக்குள் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்ததின் மூலம் போலீசார் நல்ல முறையில் செயல்பட்டுள்ளதாக நஜிப் கூறினார்.
போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளையும் நீரையும் பயன்படுத்தியதையும் அவர் தற்காத்துப் பேசினார். அதில் பயன்படுத்தப்படும் இரசாயனம் ஒருவருடைய ஆரோக்கியத்தைப் பாதிக்காது என ஆர்ப்பாட்டங்களை நன்கு அறிந்துள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக நஜிப் மேலும் கூறினார்.
தேர்தல்கள் தாமதமடையுமா ? ‘பொறுத்திருந்து பாருங்கள்’
எல்லா ஆர்ப்பாட்டக்காரர்களும் வன்முறையில் இறங்கவில்லை என்றாலும் சில தீவிரவாதிகள் பெர்சே 3.0ன் தோற்றத்துக்கும் அதன் பங்கேற்பாளர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக பிரதமர் சொன்னார். நாட்டின் அனைத்துலக தோற்றமும் ஒரளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது.
“கும்பல் உணர்வு தலைதூக்கும் போது அது சாதாரண மக்களையும் பாதிக்கும். வன்முறையில் ஈடுபடாதவர்கள் கூட மூர்க்கத்தனமாவர்,” என்றார் அவர்.
ஏப்ரல் 28ம் தேதி ஆர்ப்பாட்டக்காரர்களாக இருந்தாலும் சரி போலீஸ்காரர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் உதவுவதற்காக பேரணி நிகழ்ந்த போது 30 மருத்துவர்கள் உட்பட 130 மருத்துவ அதிகாரிகளை அரசாங்கம் பணியில் அமர்த்தியிருந்ததாகவும் பிரதமர் சொன்னார்.
தூய்மையான நியாயமான தேர்தல்களைக் கோரி பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலும் ஜுன் மாதம் நிகழும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்களை அரசாங்கம் தள்ளி வைக்க முடிவு செய்யுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த நஜிப் “பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.