நேற்று முன்தினம் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே பேரணியின் போது தமிழ் நாளிதழான மக்கள் ஓசை புகைப்படக் கலைஞர் பி. மலையாண்டி (வயது 53) காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன்; சுமார் 7,000 வெள்ளி பெறுமதியான அவரது புகைப்படக் கருவியை காவல்துறையினர் அபகரித்துச் சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் ஜாலான் ராஜா லாவுட்டில் கோலாலம்பூர் மாநாகர் மன்ற தலைமையகத்தின் முன் நடைபெற்ற பெர்சே பேரணியின் போது பணியில் ஈடுபட்டிருந்த பி. மலையாண்டியை சுமார் 5-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆடையை பிடித்து இழுத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
அப்போது, தான் பத்திரிக்கையாளர் என்று தனது அடையாள அட்டையை காண்பித்தபோதும் காவல்துறையினர் சற்றும்கூட அதனை பொருட்படுத்தாமல் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். அதன்பின்னர் அவரிடம் இருந்து புகைப்படக் கருவியையும் பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பம் குறித்து செந்தூல் காவல்நிலையத்தில் பி. மலையாண்டி புகார் செய்துள்ளார்.
பெர்சே பேரணி குறித்த தகவல்களைச் சேகரித்துக் கொண்டு இருந்த பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறையினர் நடத்தி அராஜகமான தாக்குதலை குறிப்பாக மக்கள் ஓசை பத்திரிக்கையாளர் பி. மலையாண்டி கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தை செம்பருத்தி வன்மையாக கண்டிக்கிறது.
சனிக்கிழமையன்று ஏழு காவல்துறை அதிகாரிகளினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சன் நாளேட்டின் நிருபர் ராட்ஸி ரசாக்கிடம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மெல்லிய தொனியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினரால் தாக்கப்பட்ட நிருபர்களிடம் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது அச்சம்பம் குறித்து உரிய நடவடிக்கைகள் உரியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் இருக்க பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் செம்பருத்தி வலியுறுத்துகிறது.
கடந்த சனிக்கிழமையன்று சுமார் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட பெர்சே 3.0 பேரணியின்போது உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் மீது மட்டுமின்றி வெளிநாட்டு நிருபர்கள் மீதும் காவல்துறையினர் தங்களது அடக்குமுறையை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.