சன் நிருபர் ராட்ஸி ரசாக்கிற்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவ மனையில் மருத்துவ சோதனை நடத்தப்பட்ட போது அவருக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.
அதற்கு பின்னர் அவரது தாடை எலும்பில் கம்பி போட்டுக் கட்டப்பட்டுள்ளது.
“கோலாலம்பூர் மருத்துவமனை என்னுடைய முகத்தை சோதிக்கவில்லை. என்னுடைய கன்னங்களில் வலி குறையவில்லை என நான் புகார் செய்ததும் அசுந்தா மருத்துவமனை அதனைக் கண்டு பிடித்தது,” என அவர் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள டிவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பெர்சே 3.0 பேரணியின் போது தம்மை சீருடை அணிந்திருந்த ஏழு போலீஸ்காரர்கள் தாக்கியதாக கூறியுள்ள ராட்ஸி, அந்த எலும்பு முறிவு சேருவதற்காக தமது தாடை கம்பி போட்டுக் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“ஒரு வாரத்திற்கு நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் கஞ்சி உணவையும் சூப்களையும் மட்டுமே சாப்பிட வேண்டும் என உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர் ஆலோசனை கூறியுள்ளார்.”
உட்காயம் ஏதுமில்லை
தமது காயங்கள் தொடர்பில் இரண்டாவது கருத்தை பெறும் பொருட்டு சன் நிறுவனம் தம்மை திங்கட்கிழமையன்று அசுந்தா மருத்துவமனைக்கு மாற்றியதாக ராட்ஸி சொன்னார்.
சனிக்கிழமை இரவு முதல் அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு முதலில் நெஞ்சு எலும்பு முறிவும் உட்காயங்களும் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
“எனக்கு உட்காயங்கள் ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது,” என ராட்ஸி மேலும் கூறினார்.
நெஞ்சு எலும்புக் காயம் என முதலில் சந்தேகித்த கோலாலம்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் பின்னர் அது பழைய காயம் என்றும் சனிக்கிழமை சம்பவத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை என உறுதி செய்தனர்.
ராட்ஸி கூறும் விவரங்களை விசாரிப்பதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் உறுதி அளித்துள்ளார்.