மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடியதை மறைக்கவே பெர்சே வன்முறைக்குத் திட்டமிடப்பட்டது

கடந்த சனிக்கிழமையன்று பெர்சே 3.0 பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டது மீது கவனம் செலுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு அந்தப் பேரணியின் முடிவில் வன்முறைகள் திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்டதா ?

இன்று அந்தக் கேள்வியை ஷா அலாம் எம்பி காலித் சாமாட் எழுப்பினார். மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடியது, தேர்தல் முறை மீதான நம்பிக்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், குழப்பம் மீது கவனம் செலுத்தப்பட்டதால் அந்த விஷயம் புதைந்து போனது என்றார்.

“அன்று கூடிய மக்கள் எண்ணிக்கை புதிய வரலாறு ஆகும். அந்த விஷயத்தை மறைப்பதற்காக கலவரம் எனக் கூறிக் கொள்ளும் பொருட்டு வன்முறைகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டன,” என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.

பெர்சே 3.0 பேரணியில் கூடியவர் எண்ணிக்கை 100,000 என மலேசியாகினி மதிப்பிட்டுள்ளது. ஆனால் அந்த எண்ணிக்கை 250,000 என பேரணி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

ஆர்ப்பட்டக்காரர்களினால் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார் என்ற வதந்திகள் அன்றைய தினம் பரப்பி விடப்பட்டது குறித்தும் காலித் கேள்வி எழுப்பினார்.

“ஏன் அந்த வதந்தி பரப்பப்பட்டது ? பேரணியில் குழப்பம் ஏற்படுவதற்கும் அங்கு கூடிய மக்கள் எண்ணிக்கையை மறைப்பதற்கும் தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கைக்கு நெருக்கடி தோன்றுவதைத்  தவிர்ப்பதற்கும்  வகுக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதி அந்த வதந்தியா ?” என அந்த ஷா அலாம் எம்பி வினவினார்.