“ஆஸ்திரேலியாவில் அதிகச் செலவாகும் என்பதால் லினாஸ் மலேசியாவைத் தேர்வு செய்தது”

லினாஸ், தனது அரிய மண் தொழில் கூடத்தை அமைப்பதற்கு மலேசியாவை தேர்வு செய்திருப்பதற்கான காரணத்தை தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்று அந்த மேற்கு ஆஸ்திரேலிய  சுரங்க, பெட்ரோலிய அமைச்சர் நோர்மன் மூர் கூறுகிறார்.

ஆஸ்திரேலியா தயாரிப்புத் தொழில்களுக்கும் கீழ் நிலை நடவடிக்கைகளுக்கும் அதிகச் செலவு பிடிக்கும் நாடு என அவர் சொன்னார்.

ஆஸ்திரேலியாவில் சுரங்க நடவடிக்கைகள் நிறைய மேற்கொள்ளப்பட்டாலும் அந்த உலோகங்களில் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு அவை பக்குவப்படுத்தப்படுவது இல்லை என அவர் மேற்கு ஆஸ்திரேலியா பெர்த்தில் நிருபர்களிடம் கூறினார்.

குவாந்தான் கெபெங்கில் கினாஸ் 700 மில்லியன் ரிங்கிட் செலவில் அரிய மண் பதனீட்டுத் தொழில் கூடத்தை அமைத்து வருகிறது. அந்தத் தொழில் கூடம் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெல்ட் மலையில் எடுக்கப்படும் மூலப் பொருட்களைப் பயன்படுத்தும்.

ஆஸ்திரேலியாவில் அவை பதனீடு செய்யப்படுவதைக் காணத் தாம் விரும்பினாலும் வர்த்தக நோக்கங்களின் அடிப்படையில் மலேசியாவை லினாஸ் தேர்வு செய்ததற்கு மதிப்புக் கொடுப்பதாக மூர் கூறினார்.

“தனது பொருளாதார, நிதி சூழ்நிலைகளுக்கு ஏற்ப லினாஸ் முடிவு எடுக்கிறது. அது மேற்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கம் ஒன்றை உருவாக்கி வருவது எங்களுக்குத் தெரியும். அதனால் வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. அரிய மண் சந்தையில் ஒர் அங்கமாக மேற்கு ஆஸ்திரேலியாவை அது திகழச் செய்துள்ளது. அதில் பங்கு கொள்ள நாங்களும் நாட்டம் கொண்டுள்ளோம்.”

“என்றாலும் பொருளாதார காரணங்களுக்காக பதனீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது என அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அது மலேசியாவுக்கும் நன்மையைத் தரும்,” என அவர் மேலும் சொன்னார்.

தற்போது சீனா அரிய மண்ணை அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறது. உயர்ந்த தொழில் நுட்பத்தைக் கொண்ட மின்னியல் பொருட்களை உருவாக்குவதற்கு அரிய மண் முக்கியமான ஆதாரமாகும். அதற்கு பெரிய சந்தையாகத் திகழ்வது ஜப்பான் ஆகும்.

சீனாவுக்கு வெளியில் வெல்ட் மலை அரிய மண் படிவங்களை அதிக அளவில் கொண்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் இரும்பு, ஈயம், காரீயம், நிக்கல், செம்பு, தங்கம் போன்ற உலோகப் படிவங்களும் நிறைந்திருக்கின்றன.

அவை உலோகங்களாக இருந்தாலும் அவற்றை பதனீடு செய்யும் நடவடிக்கைகள் ஆஸ்திரேலியாவுக்குள் மிகவும் குறைந்த அளவிலேயே நடைபெறுகின்றன என்று மூர் சொன்னார்.

“நாங்கள் மாற்றத்தைக் காண விரும்புகிறோம். ஆனால் ஆஸ்திரேலியா தயாரிப்பு மற்றும் கீழ் நிலை நடவடிக்கைகளுக்கு அதிகச் செலவு பிடிக்கும் நாடு ஆகும். அதனால் போட்டியிடுவதற்கு நாங்கள் மிகவும் சிரமப்படுவோம். எடுத்துக்காட்டுக்கு எங்கள் இரும்பைக் கொண்டு சீனா, எஃகுப் பொருட்களைத் தயாரிக்கிறது. நாங்கள் அவற்றை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது,” என அவர் மேலும் கூறினார்.

இதனிடையே மலேசியா முதலீடு செய்வதற்கு நல்ல இடம் என்றும் கெபெங் கனரகத் தொழில்களுக்குப் போதுமான அடிப்படை வசதிகளைக் கொண்டுள்ளது என்றும் லினாஸ் நிர்வாகத் தலைவர் நிக்கோலஸ் கர்ட்டிஸ் கூறியிருக்கிறார்.

“நாங்கள் உலக அளவிலான வாணிகத்தில் ஈடுபட்டுள்ளோம். அடிப்படை வசதிகள் நன்கு வளர்ச்சி கண்டுள்ளதாலும் விதி முறைகள் தெளிவாக இருப்பதாலும் நாங்கள் மலேசியாவைத் தேர்வு செய்தோம்,” என்றார் அவர்.

பெர்னாமா

TAGS: