ஆத்திரமடைந்துள்ள வணிகர்கள் அம்பிகா கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகின்றனர்

பெர்சே 3.0 பேரணியால் தங்களது வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக கூறிக் கொண்டுள்ள மலாய் வணிகர்கள் குழு ஒன்று, இந்த நாட்டில் மேலும் குழப்பம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பெர்சே கூட்டமைப்பின் கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.

கோலாலம்பூரில் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் கடைத் தொகுதி ஒன்றுக்கு வெளியில் கூச்சல் போட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்த 30 பேர்களில் சிலர் கடந்த சனிக்கிழமையன்று பேரணி நிகழ்ந்த போது தாங்கள் வியாபாரத்தில் ஈடுபடாததால் 200,000 ரிங்கிட் வரையில் இழப்பு ஏற்பட்டதாகக் கூறிக் கொண்டனர்.

பெர்சே “தங்களது வருமான ஆதாரத்தை” நொறுக்கி விட்டதாக மலேசிய சிறிய நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த முகமட் ரிட்சுவான் கூறினார். கடந்த மூன்று பெர்சே பேரணிகளின் போது தங்களது வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர் புகார் செய்தார்.

“பெர்சே ‘kurang ajar’ )மரியாதைக் குறைவானது. அம்பிகாவை கைது செய்து அவரை நாட்டை விட்டுத் துரத்துமாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

“சிறிய மீன்களை மட்டும் பிடிக்க வேண்டாம். உள்துறை அமைச்சு அதனைச் செய்யத் தவறி விட்டால் நாங்கள் அம்பிகா வீட்டுக்கு முன்னாள் பேரணியை நடத்துவோம். அங்கு வியாபாரம் செய்வோம்,” என அவர் எச்சரித்தார்.

 

ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்த பதாதைகளில் சில பெர்சே தலைவரை இலக்காகக் கொண்டிருந்தன. அவற்றுள் ‘Keluar Dari Tanah Melayu’, ‘Bersih Komunist’, ‘Kami Sokong YB Dato Sri PM’ ஆகியவையும் அடங்கும்.

 

TAGS: