பெர்சே 3.0 பேரணிக்கும் புரட்சி முயற்சிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது மீது போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.
அந்தத் தகவலை ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் இன்று வெளியிட்டுள்ளார்.
பிஎன் தலைமை தாங்கும் கூட்டரசு அரசாங்கத்தை வீழ்த்துவதே அந்தப் பேரணியின் நோக்கம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருப்பது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அவர் அதனைத் தெரிவித்தார்.
புரட்சி முயற்சி எனக் கூறப்படுவது மீது மேலும் விவரம் தராத இஸ்மாயில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குக் தகவல்களை அளிக்குமாறு பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
“பெர்சே 3.0ன் போது கலவரம் செய்தவர்களுடைய படங்கள் வெளியிடப்பட்ட பின்னர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தச் சம்பவங்கள் மீது எங்களுக்குப் பொது மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.”
“மலேசியர்கள் அமைதியை விரும்புகின்றனர் என்பதற்கு அது நல்ல அறிகுறியாகும். நாட்டின் பாதுகாப்பு விட்டுக் கொடுக்கப்படக் கூடாது என்றும் பொது மக்கள் கருதுகின்றனர்,” என அவர் இன்று கூலிமில் நிருபர்களிடம் சொன்னார்.
அரசாங்கம் பலவீனமாக இருப்பதாகச் சித்தரிக்கும் பொருட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு டாத்தாரான் மெர்தேக்காவை தங்கள் வசம் வைத்திருக்க பேரணி ஏற்பாட்டாளர்கள் எண்ணியிருந்ததாக நஜிப் கடந்த வெள்ளிக் கிழமை குவா மூசாங்கில் கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
“அவர்கள் எகிப்தின் தாஹ்ரிர் சதுக்கத்தைப் போன்று டாத்தாரான் மெர்தேக்காவை மாற்ற அவர்கள் விரும்பினர்,” என்றார் நஜிப்.
தூண்டி விடும் ஏஜண்டுகள்
பேரணியின் போது தூண்டிவிடும் ஏஜண்டுகளாக போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் உலா வருவது பற்றியும் இஸ்மாயிலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்றார்.
“அபத்தமான குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டாம். இணைய குடி மக்கள் (netizens) அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். என்றாலும் எல்லாக் குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்படும்.”
பெர்சே 3.0 பேரணியின் போது 100,000 பேர் கோலாலம்பூர் சாலைகளில் ஊர்வலமாகச் சென்றனர். தங்களால் முடிந்த அளவுக்கு டாத்தாரான் மெர்தேக்காவுக்கு மிக அணுக்கமாக அவர்கள் சென்றனர்.
பொருத்தமான தேர்தல் சீர்திருத்தங்களை நஜிப் நிர்வாகமும் தேர்தல் ஆணையமும் ஈடுபாடு காட்டவில்லை எனக் கருதி நியாயமான சுதந்திரமான தேர்தல்களுக்கு பேரணி பங்கேற்பாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் யாரும் நுழையக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை அமலாக்கும் பொருட்டு போலீசார் அந்தத் திடலைச் சுற்றிலும் கம்பி வேலிகளை அமைந்திருந்தனர்.
கூட்டத்தினர் கலைந்து போகலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்த பிற்பகல் மூன்று மணி வரை அந்தப் பேரணி அமைதியாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் தடுப்பை மீறிச் சென்று டாத்தாரான் மெர்தேக்காவை அணுகினர். அப்போது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதால் அவர்கள் பின் வாங்கினர்.
அதனைத் தொடர்ந்து அமைதியான ஆர்ப்பாட்டம் அலங்கோலமாகியது. ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய போலீஸ்காரர்கள் முனைந்தனர். அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தியதால் சில இடங்களில் எதிர்ப்புக் காட்டப்பட்டது.