உங்கள் கருத்து: “தூய்மையான நியாயமான தேர்தல்களை நடத்துவது, இந்த நாட்டின் சட்டங்களுக்கு எதிரானது என பாத்வா குழு கருதுமானால் எது சரி எது தவறு என சொல்லத் தெரியாத அமைப்பாக அது தாழ்ந்து விட்டது.”
சில ஆர்ப்பாட்டங்கள் ஹராம் என பாத்வா குழு பிரகடனம்
பெண்டர்: அந்த தேசிய பாத்வா குழு விடுத்த பிரகடனத்தில் பெரும்பகுதி சரியானது. சேதத்தை ஏற்படுத்துவது, குழப்பத்தை உருவாக்குவது, மக்களுக்கும் வியாபாரத்துக்கும் தீங்கு செய்வது ஆகியவை நிச்சயம் ஹராம் ஆகும்.
ஆனால் அந்த ஆணை பெர்சே 3.0 பேரணிக்குப் பொருந்தாது. அது அரசாங்கத்தை வீழ்த்துவதோ தீங்கை விளைவிப்பதோ பயனில்லாமல் கூடுவதோ அல்ல.
பெர்சே-யில் சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் அந்த பாத்வா பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. பெர்சே கூட்டத்தில் அவர்கள் செய்ததற்கு அது பொருந்தாது. ஆனால் போலீசாரைப் பொறுத்த மட்டில் அந்த ஆணை நிச்சயம் பொருந்தும்.
ஆகவே போலீசார் அந்த பாத்வாக்களை கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பாவி மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தியதற்காகவும் குழுப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் சொத்துக்களுக்குச் சேதத்தை விளைவித்ததற்காகவும் முஸ்லிம் போலீஸ் அதிகாரிகள் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் தங்களைத் திருத்திக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அந்த இருவரில் ஒருவர் தமது தலைமைத்துவத்தின் கீழ் உள்ள மக்களை போலீஸ்காரர்கள் தாக்கிய வேளையில் சரவாக்கில் கோழையைப் போல மறைந்து கொண்டிருந்தார். இன்னொருவர் முழு குழப்பத்திற்கும் திட்டமிட்டு விட்டு மக்கள் தாக்கப்பட்ட வேளையில் கைகளை கட்டிக் கொண்டிருந்தார்.
அந்த ஆணைகளை வெளியிட்ட பாத்வா மன்றத்துக்கு மிக்க நன்றி.
Betul Punya Satu Malaysia: இது எந்த விதமான பாத்வா ? எகிப்திலும் மத்திய கிழக்கிலும் ஊழல் அரசாங்கங்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. ஆனால் அந்த இஸ்லாமிய நாடுகளில் (நம்மைக் காட்டிலும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர்) அத்தகைய பாத்வாக்கள் வெளியிடப்படுவது இல்லை. அம்னோ அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக அது தெரிகிறது.
அர்மகடோன்: அந்த பாத்வா திருக்குர் ஆன் போதனைகளை பின்பறுகிறதா அல்லது தங்களது sumpah laknat-டைச் செய்யும் போது மட்டும் அந்தப் புனிதப் புத்தகத்தைப் பயன்படுத்தும் தலைவர்களைக் கொண்ட அம்னோ போதனைகளை பின்பற்றுகிறதா ?
போலீஸ்காரர்கள் குண்டர்களைப் போல அப்பாவி மக்களை தாக்கியதை என்னவென்று சொல்வது ? தூய்மையான தேர்தல்களையே பெர்சே கோருகிறது. தேர்தல்களில் பித்தலாட்டம் செய்யும் பிஎன்-னுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் ? பாத்வாக்கள் வெளியிடப்படுவதற்கு இன்னும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன.
ஜஸ்டிஸ் பாவ்: தேசிய பாத்வா குழு தன்னை இன்னொரு அம்னோ கிளையாக தாழ்த்திக் கொண்டு விட்டது.”தூய்மையான நியாயமான தேர்தல்களை நடத்துவது இந்த நாட்டின் சட்டங்களுக்கு எதிரானது என பாத்வா குழு கருதுமானால் எது சரி எது தவறு என சொல்லத் தெரியாத அமைப்பாக தாழ்ந்து விட்டது.
ஊழல், அவதூறு, மோசடி, இனவாதம் ஆகியவற்றை அந்தக் குழு சரி என்று சொல்கிறதா ?
அடையாளம் இல்லாதவன்_rb345: ஊழல், நீர் மூழ்கிகளை கொள்முதல் செய்ததற்கு தரகுப் பணம் கொடுப்பது, தோல்வி அடைந்த தேசியத் திட்டங்கள் ஆகியவை மீது ஏன் பாத்வா வெளியிடப்படவில்லை.
மூங்கில்: தூய்மையான தேர்தல்களுக்கான வேண்டுகோள் ஹராம் ஆகும் ஆனால் ஊழல் அப்படி அல்ல ? ஊழலுக்கும் மக்கள் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
முன்னாள் பிரதமர் ஒருவர் தமது புதல்வர்களுடைய தொழில்களைக் காப்பாற்ற பெட்ரோனாஸ் பணத்தைப் பயன்படுத்தினார். முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஒருவர் நீர்மூழ்கிகளை வாங்குவதற்கு பல பில்லியன் ரிங்கிட் தரகுப் பணம் கோரினார். இன்னொரு அமைச்சர் மாடுகளை வளர்ப்பதற்கு வழங்கப்பட்ட எளிய கடனைக் கொண்டு ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை வாங்கினார். பொது மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த பல விஷயங்களில் சில அவை.
அர்ட்ச்சன்: அப்துல் சுக்கோர் அவர்களே, இந்த நாட்டில் உள்ள ஊழல்வாதிகளையும் கொலைக்காரர்களையும் பாதுகாப்பதற்கு இறைவன் பெயரைப் பயன்படுத்த வேண்டாம். அது உண்மையான இஸ்லாம் அல்ல. அம்னோ இஸ்லாம்.