பிரான்சின் புதிய அதிபரானார் ஹோலன்டா

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் சர்கோசி தோல்வியடைந்தார். இதனையடுத்து புதிய அதிபராக ஹோலன்ட் பதவியேற்க உள்ளார்

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, கடந்த மாதம் 22ம் தேதி, அதிபர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், சர்கோசி இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, சோஷலிஸ்ட் கட்சி சார்பில், பிராங்காய்ஸ் ஹோலன்ட் போட்டியிடுகிறார். முதல் கட்ட தேர்தலில் வேட்பாளராக 10 பேர் களத்தில் இருந்தனர்.

முதல் கட்ட தேர்தலில், 50 சதவீத ஓட்டுகள் யாருக்கும் கிடைக்காத நிலையில், நேற்று இரண்டாவது கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சர்கோசியும், பிராங்காய்ஸ் ஹோலன்டும் களத்தில் இருந்தனர். பொருளாதார மந்த நிலை, வேலை வாய்ப்பின்மை, வரி விதிப்பு, ஓய்வூதியம் குறைப்பு மற்றும் மறுப்பு உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தி, இத்தேர்தலில் ஹோலன்ட் பிரசாரம் செய்தார். “மீண்டும் வாய்ப்பு அளித்தால், பிரான்ஸ் மேலும் வலுவுள்ளதாக மாறும்’ என, அதிபர் சர்கோசி உறுதியளித்துள்ளார்.