தேசிய பாத்வா குழு தேர்தல் மோசடிகள் காரணமாக உருவான ஆர்ப்பாட்டங்கள் மீது கவனம் செலுத்துவதற்குப் பதில் அடிப்படைப் பிரச்னையான அந்த தேர்தல் மோசடிகள் மீது அக்கறை காட்ட வேண்டும் என பாஸ் கட்சியின் உலாமா பிரிவு இன்று வலியுறுத்தியுள்ளது.
“கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு ஆர்ப்பாட்டம் செய்வது, இஸ்லாம் கூறுகின்ற ‘amar ma’ruf nahi mungkar’ (சரியானதை நிலை நிறுத்துவது, தவறானதைத் தடுப்பது) என்ற கடமைகளை அடிப்படையாகக் கொண்டது,” என உலாமா பிரிவுத் தலைவர் துவான் குரு ஹருண் தாயிப் விடுத்துள்ள அறிக்கை கூறியது.
தேர்தல் மோசடிகள் மீதான பெர்சே கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கத்தை பெர்சே 3.0 கொண்டுள்ளதால் எல்லா முஸ்லிம்களும் செய்ய வேண்டிய கடமைகளில் ஒரு பகுதியை அது குறிக்கிறது என அவர் விளக்கினார்.
“சில தரப்புக்களின் தூண்டுதல் இல்லாதிருந்தால் அந்த அமைதியான பெர்சே 3.0 ஆர்ப்பாட்டம் குழப்பமாக மாறியிருக்காது,” என அவர் மேலும் கூறினார்.
‘பயனில்லாத, சட்டத்துக்குப் புறம்பான, நாட்டில் கலவரத்தை மூட்டக் கூடிய ஆர்ப்பாட்டங்களில் அல்லது எந்த ஒரு கூட்டத்திலும்’ முஸ்லிம்கள் பங்கு கொள்வது ‘ஹராம்’ (அனுமதிக்கப்படவில்லை) என தேசிய பாத்வா குழு நேற்று பிரகடனம் செய்துள்ளது குறித்து துவான் குரு ஹருண் தாயிப் கருத்துரைத்தார்.