ஆஸ்திரேலிய செனட்டர் உத்துசான் மீதும் வழக்குத் தொடர எண்ணுகிறார்

சுயேச்சை தெற்கு ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன், உத்துசான் மலேசியா உட்பட இரண்டு உள்ளூர் நாளேடுகள் தம்மைத் தவறாக மேற்கோள் காட்டி தாம் இஸ்லாத்துக்கு எதிரானவர் எனச் சித்தரித்ததற்காக அவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றிப் பரிசீலித்து வருகிறார்.

“அது எந்த மொழியில் வெளியிடப்பட்டாலும் (சட்ட நடவடிக்கை பற்றி பரிசீலிக்கப்படும்) அவை மன்னிப்புக் கேட்டாலும் கேட்கா விட்டாலும் நிச்சயம் சட்ட நடவடிக்கை பற்றி பரிசீலிக்கப்படும்,” என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.

2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி செனபோன் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை தவறாக மேற்கோள் காட்டி உத்துசான் மலேசியாவும் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸும் (என்எஸ்டி) வெளியிட்ட கட்டுரை பற்றி அந்த செனட்டர் குறிப்பிட்டார்.

அவர் சொன்னது இது தான்: “Scientology is not a religious organisation. It is a criminal organisation that hides behind its so-called religious beliefs.” ( அறிவியல் இயல் என்பது சமய அமைப்பு அல்ல. அது சமய நம்பிக்கைகள் என அழைக்கப்படும் விஷயங்களுக்குள் மறைந்திருக்கும் கிரிமினல் அமைப்பு ஆகும்)

ஆனால் அந்த இரண்டு நாளேடுகளும் செனபோன் இஸ்லாத்துக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக அந்த ‘Scientology’ என்னும் சொல்லை எடுத்து விட்டு ‘Islam’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளன.

என்எஸ்டி மன்னிப்புக் கோரியது

செனபோனின் கடுமையான கண்டனத்துக்கு இலக்கான ஆங்கில மொழி நாளேடான என்எஸ்டி அடுத்த நாளன்று தனது ‘கடுமையான தவறுக்கு’ மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

என்எஸ்டி மன்னிப்புக் கேட்டுக் கொண்ட போதிலும் அதற்கு  எதிராக அவர் சட்ட நடவடிக்கை எடுப்பார் என அவரது அலுவலகப் பேச்சாளர் ஒருவர் கூறியதாக வெளியான தகவல்களை செனபோன் உறுதி  செய்தார்.

“நான் சட்ட ஆலோசனை நாடுவதை உறுதி செய்கிறேன்.. என் மீது கூறப்பட்ட விஷமத்தனமான வெறுப்பைத் தருகின்ற கருத்துக்கள் கடுமையான அவதூறுகளாகும். அதனை நான் ஆதரிக்கவில்லை,” என்றார் அவர்.

அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவும் அதே போன்ற செய்தியை தவறாக மேற்கோள் காட்டி வெளியிட்டிருந்தது. அது தனது இணையத் தளத்தில் சேர்க்கப்பட்டிருந்த அந்தச் செய்தியை இப்போது மீட்டுக் கொண்டு விட்டது. ஆனால் இது வரை மன்னிப்புக் கேட்கவில்லை.”

மலேசிய தேர்தல் முறை குறித்து உண்மை நிலை அறியும் பயணம் மேற்கொண்ட எழுவர் கொண்ட அனைத்துலகக் குழுவில் செனபோனும் இடம் பெற்றிருந்தார். அவர்கள் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அலுவலக அழைப்பை ஏற்று இங்கு வந்தனர்.

 

TAGS: