தேர்தல் ஆணையத் தலைவரும் துணைத் தலைவரும் உண்மையில் அம்னோ உறுப்பினர்கள் எனக் கூறப்படுவதை விசாரிக்க பஞ்சாயத்து மன்றம் ஒன்றை அமைக்க அகோங்கிற்கு ஆலோசனை கூறுமாறு பிரதமரைக் கேட்டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை பிகேஆர் எழுதவிருக்கிறது.
இசி தலைவர் தமது நியமிக்கப்பட்ட மூன்று மாத காலத்துக்குப் பின்னர் எந்த ஒரு அமைப்பிலும் பதவி வகித்ததால் அவர் தகுதியிழந்து விடுவார் என கூட்டரசு அரசமைப்பின் 114வது விதி கூறுவதே அதற்குக் காரணம் என அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் வழக்குரைஞருமான ஆர் சிவராசா கூறினார்.
“பஞ்சாயத்து மன்றத்தை அமைக்குமாறு பிரதமர் ஆலோசனை சொல்லா விட்டால் நாங்கள் அகோங்கிடம் போக வேண்டியிருக்கும்,” என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.
இசி தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் அம்பாங் அம்னோ தொகுதி உறுப்பினர் என்றும் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் பாசிர் மாஸ் அம்னோ தொகுதி உறுப்பினர் என்றும் அண்மையில் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.
அது உண்மையா என்பதை தாம் சரி பார்க்க வேண்டும் என அப்துல் அஜிஸும் 1998ம் ஆண்டு தாம் இசி-யில் சேர்ந்தது முதல் அம்னோ உறுப்பினராக இல்லை என வான் அகமட்டு கூறிக் கொண்டுள்ளனர்.
மே மாதம் 10ம் தேதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கான அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் என்றும் சிவராசா கூறினார்.
கூட்டரசு அரசமைப்பின் 125வது பிரிவுக்கு இணங்க கூட்டரசு நீதிபதிகளுக்கு வழங்கப்படுகின்ற அதே பதவிக் காலப் பாதுகாப்பு இசி உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுவதால் பிகேஆர் அந்தப் பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட வேண்டும் எனப் பிகேஆர் கோருவதாகவும் அந்த சுபாங் எம்பி சொன்னார்.
வான் அகமட் தாம் அம்னோ உறுப்பினர் எனக் கூறப்படுவதை மறுத்துள்ள போதிலும் அவரது விவகாரம் பஞ்சாயத்து மன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என அந்த நிருபர்கள் சந்திப்பில் உடனிருந்த பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறினார்.
ஏனெனில் வான் அகமட் அந்த விவகாரம் தொடர்பாக விடுத்துள்ள மூன்று அறிக்கைகள் “ஒன்றுக்கு ஒன்று முரணாக” இருப்பதாக ராபிஸி தெரிவித்தார்.
அப்துல் அஜிஸும் வான் அகமட்டு தங்களுடைய அம்னோ உறுப்பியத் தகுதி பற்றி தெளிவாக இல்லாததால் அவர்கள் நியமனம் செய்யப்பட்ட போது அரசமைப்புக்கு இணங்க சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதைக் காட்டுவதாக அவர் சொன்னார்.
1970களில் அல்லது 1980களில் தாம் அம்னோவில் உறுப்பினராகப் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என வான் அகமட் கூறியதாக ஏப்ரல் 27ம் தேதி சினார் ஹரியான் செய்தி வெளியிட்டது.
1998ம் ஆண்டு முதல் தாம் அம்னோ உறுப்பினராக இல்லை என அவர் சொன்னதாக ஏப்ரல் 28ம் தேதி பெர்னாமா தகவல் வெளியிட்டது.
அடுத்து தாம் அம்னோ பாசிர் மாஸ் உறுப்பினர் எனக் கூறப்படுவதை மறுத்த வான் அகமட், அந்த விவகாரம் இன்னொரு வான் அகமட் வான் ஒமார் சம்பந்தப்பட்ட தவறான அடையாளம் என்றும் கூறினார்.
இதனிடையே ‘உண்மையான’ வான் அகமட் வான் ஒமார், திரங்கானுவில் பிறந்த இசி துணைத் தலைவருக்காக தாம் வருந்துவதாக பின்னர் சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.