பினாங்கு மாநில அரசை இழித்துரைக்கும் துண்டறிக்கைகள் குறித்து பினாங்கு பிகேஆர் இளைஞர் பகுதி போலீசில் புகார் செய்துள்ளது.அந்தத் துண்டறிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை பெர்மாத்தாங் பாவில் நடைபெறும் தேசிய ஹரி ராயா விருந்துபசரிப்பின்போது விநியோகிக்கப்படுவதற்காக தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று அது கருதுகிறது.
அப்புகாரைச் செய்த பிகேஆர் இளைஞர் தலைவர் அமிர் முகம்மட் கசாலி, அந்த அறிக்கைகளில் ஒன்றை நண்பர் ஒருவர் நேற்று குபாங் செமாங்கில் தம்மிடம் கொடுத்ததாகக் கூறினார்.
மாநில அரசு “30 dasar kerajaan berjiwa rakyat” (மக்கள் நலம் சார்ந்த அரசின் 30 திட்டங்கள்) என்ற தலைப்பில் தயாரித்துள்ள துண்டறிக்கைகள் போன்று காட்சியளிக்கும் அவை மாநில அரசுக்கு எதிராக “அவதூறு கூறுவனவாக” உள்ளன என்று அமிர் குறிப்பிட்டார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கலந்துகொள்ளும் பொது உபசரிப்பில் பொதுமக்களிடையே அவை விநியோகிக்கப்படலாம் என்றாரவர்.
அந்த விருந்துபசரிப்பின்போது மக்களிடையே விநியோகிப்பதற்காக முதலமைச்சர் லிம் குவான் எங் அரசு அதிகாரப்பூர்வ துண்டறிக்கையைத் தயாரித்துள்ளது. மாநில அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய செய்திகள் மைய நீரோட்ட ஊடகங்களில் இடம்பெறுவதில்லை என்பதால் அந்த அறிக்கையில் அவை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கையின் முடிவில் “மக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது; மக்களை வளப்படுத்துகிறது”என்ற சுலோகம் இருக்கும். ஆனால், போலி அறிக்கையில் “மக்களைப் பலவீனப்படுத்துகிறது; மக்களிடம் பொய் சொல்லுகிறது” என்ற சுலோகம் உள்ளது.
பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரியானவைபோல் காட்சியளிக்கின்றன.
ஹரி ராயா பொது உபசரிப்பில் பிரதமர் நஜிப் தம் துணைவியார் ரோஸ்மா மன்சூருடன் கலந்துகொள்வார் என்று பெர்னாமா நேற்று அறிவித்திருந்தது.
தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திமும் அவர்தம் துணைவியார் மஸ்னா ரயிஸும் அதில் கலந்துகொள்வார்கள். பொதுமக்களில் சுமார் 10,000பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பெர்மாத்தாங் பாவ் எம்பியும் மாற்றரசுக்கட்சித் தலைவருமான அன்வார் இப்ராகிம், பொதுமக்கள் அதில் கலந்துகொள்வதை ஊக்குவித்துள்ளார். என்றாலும் தம் தொகுதியில் அதை ஏற்பாடு செய்திருப்பதற்கு உள்நோக்கம் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்.
விருதுபசரிப்பில் அந்தத் துண்டறிக்கைகள் விநியோகிக்கபடுவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமிர் வலியுறுத்துனார்.
“அது அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்வு. அம்னோ நிகழ்வு அல்ல. அதனால் அந்தத் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்”, என்றாரவர்.