ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் நிகழ்ந்த சம்பவங்களை விசாரிக்க வெளிநபர்கள் வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் அனீபா அமான் இன்று அறிவித்துள்ளார்.
அந்தப் பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்தன.
“நாம் ஆட்சியுரிமை கொண்ட நாடு. பாகுபாடு இல்லாமல் விசாரிப்பதற்கு நமக்கு ஆற்றல் உள்ளது. எங்களுக்கு போலீஸ் மீதும் அதிகாரிகள் மீதும் நம்பிக்கை உள்ளது. பொறுப்புள்ள மலேசியர்களைப் பொறுத்த வரையில் அது ஒரு பிரச்னையே அல்ல.”
“நமது நாட்டில் நடந்ததை விசாரிக்க நமக்கு யாரும் தேவையில்லை. அன்று நிகழ்ந்ததை நாம் தொலைக்காட்சியில் பார்த்துள்ளோம். உண்மையில் சம்பந்தப்பட்ட இடத்தில் அந்த நிகழ்வுகளைப் பார்த்தவர்களும் இருக்கின்றனர்,” என அனீபா கோலாலம்பூரில் இன்று மாலை நிருபர்களிடம் கூறினார்.
அந்த ஆர்ப்பாட்டத்தை விசாரிப்பதற்கு பேச்சு, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பொறுப்பேற்றுள்ள ஐநா சிறப்பு அணுசரணையாளர் பிராங் வில்லியம் லா ரு முன் வந்துள்ளது பற்றி அனீபா கருத்துரைத்தார்.
.