பிகேஆர்: பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு 35,000 ரிங்கிட் குறைவாகக் கொடுக்கப்படுகின்றது

FGVH என்னும் Felda Global Ventures Holdings Bhd நிறுவனத்தை பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படும் போது பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு 50,000 ரிங்கிட் கிடைக்க வேண்டும் என பிகேஆர் கூறுகிறது.

பிகேஆர்  செய்த கணக்கீட்டின் படி அந்தத் தொகை வருவதாக பிகேஆர் மத்தியக் குழு உறுப்பினர் வோங் சென் கூறினார்.

பிரதமர் இன்று அறிவித்த 15,000 ரிங்கிட் குறைவானது என்றார் அவர்.

பங்குப் பட்டியலில் FGVH சேர்க்கப்படும் போது அதன் ஒரு பங்கு விலை 4.65 ரிங்கிட்டாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பெல்டாவுக்கு 5.6 பில்லியன் ரிங்கிட் ஆதாயம் கிடைக்க வேண்டும்.

அந்தத் தொகை நஜிப் இன்று அறிவித்த 1.689 பில்லியன் ரிங்கிட்டை விட மும்மடங்கு அதிகமாகும்.

“குடியேற்றக்காரர்களுக்கு 30 விழுக்காட்டு மட்டுமே (ஒரு குடும்பத்துக்கு 15,000 ரிங்கிட்) பகிர்ந்தளிக்கப்படும் என மக்களிடம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என பிகேஆர் விரும்புகிறது.”

“எஞ்சியுள்ள 3.942 பில்லியன் ரிங்கிட் எப்படி செலவு செய்யப்படும் என்பதையும் பிஎன் அரசாங்கம் விவரமாக அறிவிக்க வேண்டும்,” என வோங் பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

FGVHல் உள்ள தனது 59 விழுக்காடு பங்குகளை விற்பதின் மூலம் பெல்டாவுக்கு 5.6 பில்லியன் ரிங்கிட் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்த வோங் அதில் 1.2 பில்லியன் பங்குகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

FGVH வெளியிட்டுள்ள விவரக் கையேட்டின் அடிப்படையில் அது பங்குப் பட்டியலில் சேர்க்கப்படுவதின் மூலம் தனது சொந்த நோக்கங்களுக்காக 4.557 பில்லியன் ரிங்கிட்டைத் திரட்ட முடியும் என்றும் அவர் சொன்னார்.

 

TAGS: