உங்கள் கருத்து: நஜிப் அவர்களே ஒதுங்கிக் கொள்ளுங்கள், டாக்டர் மகாதீரே இன்னும் பிரதமர்

“மகத்தான பெரும்பான்மையுடன் பிஎன் ஆட்சிக்குத் திரும்பினால் அது இசா சட்டத்தை மீண்டும் நிலை நிறுத்தும் என்ற எச்சரிக்கையை மகாதீர் வெளியிடுகிறார்.”

டாக்டர் மகாதீர்: இசா சட்டத்துக்கு புத்துயிரூட்ட நஜிப்புக்கு வலிமையான அரசாங்கத்தைக் கொடுங்கள்

குவிக்னோபாண்ட்: முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எதிர்ப்பார்க்கப்பட்டது போல பேசிக் கொண்டிருக்கிறார். பக்காத்தான் ராக்யாட்டுக்கு எதிராக காய்கள் அடுக்கடுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சண்டையில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அந்தக் கூட்டணிக்கு இல்லை என்பது நிச்சயம்.

ஆர்டிஎம் எதிர்க்கட்சிகளுடைய கருத்துக்களை ஒலி, ஒளிபரப்புமானால் எதிர்க்கட்சிகளுடைய கருத்துக்களை முக்கிய நாளேடுகள் எந்தத் திருத்தமும் செய்யாமல் வெளியிடுமானால் வாக்காளர் பட்டியல் தூய்மையானதாக இருந்தால் தேர்தல் நடைமுறைகளில் மோசடிகள் இல்லாதிருந்தால் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் தேர்தல் ஆணையம் உண்மையிலேயே நடு நிலையாக இயங்கினால் மக்கள் சாலைகளுக்கு சென்று தேர்தல் சீர்திருத்தங்கள் கோரி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

அரசாங்கம் எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காது. காரணம்  அதன் மோசடிகள் ஆழமாக வேரூன்றி விட்டன. அதனால் பிஎன் வெற்றியை யாரும் மாற்ற முடியாது. ஆனால் ஒரு விஷயத்தை பிஎன் எப்போது நினைவில் வைத்திருக்க வேண்டும். மோசடிகள் அடிப்படையில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் அது அரபு எழுச்சியைப் போன்ற நிகழ்வுகளை இங்கு அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மகாதீர் ஒரு விஷயத்தில் உண்மையை சொல்லியிருக்கிறார். மக்கள் நீண்ட கால அடிப்படையிலும் தீவிரமாகவும் சிந்திக்க வேண்டும் என்பதே அதுவாகும். மதிப்புமிக்க பொது நிதிகளை விரயம் செய்கின்ற ஒர் ஊழல் அரசாங்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை ஆள வேண்டுமா ?

தான் லி லின்: மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பிஎன் அரசாங்கம் ஏன் மீண்டும் ஆட்சிக்குத்திரும்பக் கூடாது என்பதர்கு மிக நல்ல காரணத்தை வழங்கிய டாக்டர் மகாதீருக்கு என் நன்றி.

மக்கள் பிஎன்-னுக்கு வாக்களிக்காததற்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமும் காரணம் என்பதை அவர் மறந்து விட்டார்.  மகத்தான பெரும்பான்மையுடன் பிஎன் ஆட்சிக்குத் திரும்பினால் அது இசா சட்டத்தை மீண்டும் நிலை நிறுத்தும் என்ற எச்சரிக்கையை மகாதீர் வெளியிடுகிறார். அது நடக்காமல் மக்கள் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

குழப்பம் இல்லாதவன்: அடக் கடவுளே அவர் முதிர்ந்த முதுமையை எட்டி விட்டார் என்பதையே அது உணர்த்துகிறது. நாம் அவருக்காக அனுதாபப்பட வேண்டும். அவருக்கு ஆதரவு அளிக்கக் கூடாது.

அவரது மூளை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழ்நிலைக்குச் சென்று விட்டதாகத் தோன்றுகிறது. அதாவது அவர் பிரதமராக பொறுப்பேற்ற காலத்துக்கு.

அதற்குப் பின்னர் நாட்டின் அனைத்துலக தோற்றம் வீழ்ச்சி அடைந்ததற்கும் ரிங்கிட் பரிவர்த்தனை விகிதங்கள் சரிந்ததற்கும் தனிநபர் வருமானம் மோசமடைந்ததற்கும் ஊழல் மலிந்ததற்கும் அதுவே காரணமாகும்.

அந்த அறிகுறிகளைக் கண்டு கொள்ளாமல் அவருடைய அரசாங்கத்தை நாம் மீண்டும் மீண்டும் தேர்வு செய்தோம். அதுவே நாம் செய்த பெரிய தவறாகும். அவரது மூளையின் செயல்பாடு மோசமடைந்து விட்டதை அவர் உணருவார் என நாம் எதிர்ப்பார்ப்பதும் தவறாகும். ஏனெனில் அதற்கு மிகவும் தாமதமாகி விட்டது.

உயிர் தப்பியவன்: மகாதீர் அவர்களே, நஜிப்பை ஆதரிக்க வேண்டாம் அப்படிச் செய்தால் மீண்டும் இசா சட்டம் வரும் என சொல்ல வருகின்றீர்களா?

அடையாளம் இல்லாதவன்: மலேசியர்கள் நல்ல முறையில் சிந்தித்து வாக்குகளை செலுத்த வேண்டும். உலகின் மற்ற பகுதிகளில் உள்ள தங்கள் சகாக்களைப் போன்று சுதந்திரமான உலகத்துக்கு தங்கள் மனதைத் திறக்க வேண்டும்.

துனிசிய மக்கள் மாற்றத்துக்கு வாக்களித்துள்ளனர். எகிப்தும் அவ்வாறே செய்துள்ளது. லிபியாவும் மாறி விட்டது. ஏமனும் மாறியுள்ளது. அடுத்து பாஹ்ரெய்னும் சிரியாவும் வருகின்றன. இப்போது பிரான்ஸ் மக்கள் மாற்றத்தை நாடியுள்ளனர்.

உண்மையான பங்குதாரர்களான மக்களிடம் அதிகாரம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்கு நேர்மாறாக அல்ல.

நீங்கள் மகாதீர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், துணைப் பிரதமர் முஹைடின் யாசின் ஆகியோருக்கு  தொடர்ந்து செவி சாய்த்தால் உங்கள் சக மலேசியர்களை கண்டு அச்சத்துடனேயே வாழ்வீர்கள். எல்லாப் பிரச்னைகளையும் இன, சமய அடிப்படையில்தான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.

குவினி: பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட் சொல்லாததை மகாதீர் சொல்லக் கூடாது. எழுச்சி மூலம் அரசாங்கத்தை வீழ்த்தலாம் என நிக் அஜிஸ் ஒரு போதும் சொன்னதே இல்லை.

தூய்மையான நியாயமான தேர்தல்களுக்குப் பேரணி நடத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே நிக் அஜிஸ் சொன்னார், மகாதீர் அவர்களே, உண்மையில் நீங்கள் தீய எண்ணம் கொண்ட மனிதர்.

ஜனநாயகவாதி: மகாதீர் தமது கடந்த காலம் பற்றிய அச்சத்துடனேயே வாழ்கிறார். எதிர்க்கட்சிகள் வெற்றிபெறுவதைக் காண அவர் விரும்பவில்லை. காரணம் அவரது கடந்த காலம் அவரை சிக்க வைத்து விடும்.

 

TAGS: