டிஏபி உதவித் தலைவர் துங்கு அப்துல் அஜிஸ் துங்கு இப்ராஹிமின் செனட்டர் பதவிக் காலம் மே 30ம் தேதி முடிவடையும் போது அதனை டிஏபி நீட்டிக்காது எனத் தெரிய வருகிறது.
கோலாலம்பூரில் ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியை துங்கு அப்துல் அஜிஸ் நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் டிஏபி-யின் கண்டனத்திற்கு இலக்காவார் என எதிர்பார்க்கப்பட்டது.
துங்கு அப்துல் அஜிஸை வெளிப்படையாகவே குறை கூறிய டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அவரது கருத்துக்கள் தூய்மையான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் கட்சியை “தர்மசங்கடமான சூழ்நிலைக்கு” இழுத்துச் சென்று விட்டதாகச் சொன்னார்.
முன்னாள் மாநில பிகேஆர் செயலாளரும் நடப்பு தேர்தல் இயக்குநருமான முஸ்தாபா கமால் முகமட் யூசோப்பின் செனட்டர் பதவிக் காலமும் முடிவுக்கு வருகிறது. அதுவும் புதுப்பிக்கப்பட மாட்டாது எனத் தெரிய வருகிறது.
கல்வியாளரான அரிபின் ஒமார், முன்னாள் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைவர் சையட் ஷாஹிர் சையட் மொகமாட் ஆகியோர் பினாங்கு மாநிலத்தின் புதிய செனட்டர்களாக முன்மொழியப்படுவர் என்று முதலமைச்சர் லிம் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.