தேச நிந்தனை சொற்பொழிவுகளை உடனடியாக நிறுத்துங்கள் என பிகேஆர் பிஎன்-னை எச்சரிக்கிறது

பேராக்க்கில் மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராக இரண்டு இடங்களில் தேச நிந்தனை சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது.

அதில் ஒரு நிகழ்வில் அரசாங்க ஊழியர் ஒருவர் பேச்சாளராக இருந்துள்ளார்.

மார்ச் 24ம் தேதி கெபெங் தேசியத் தொடக்கப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய தேசியப் பாதுகாப்பு மன்ற (பேராக்) உதவிச் செயலாளர்  அப்துல் ரஹிம் அப்துல் கரீம் மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டி விட்டார் என தேஜா சட்டமன்ற உறுப்பினர் சாங் லி காங் கூறினார்.

“பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் சீனர்களையும் இந்தியர்களையும் தொழிலாளர்களாக இங்கு கொண்டு வந்தனர். அதனால் அவர்களுக்கு எந்தச் சலுகையையும் கோருவதற்கு உரிமை இல்லை. நெருப்புடன் விளையாட வேண்டாம். சவாலும் விடுக்க வேண்டாம்,” என அவர் சொன்னதாகக் கூறப்படுகிறது.

ஐந்து பெற்றோர்கள் அந்த விஷயம் மீது போலீஸில் புகார் செய்துள்ளனர். மாநிலக் கல்வித் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சாங் சொன்னார்.

அரசாங்கம் நடத்தி வருகின்ற பிடிஎன் என்ற Biro Tatanegara பயிற்சிகளுக்கான பேச்சாளரும் ஆவார். அவர் அங்கும் அது போன்ற அறிக்கைகளை விடுத்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

பேராக் கோப்பெங்கில் ஏப்ரல் 15ம் தேதி “மலாய்க்காரர்களுக்கான மருட்டல்-13வது பொதுத் தேர்தல்” என்னும் தலைப்பில் எம்பிஎம் என்ற மலாய் ஆலோசனை மன்றம் சொற்பொழிவுக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்ததது, இரண்டாவது நிகழ்வாகும் என சாங் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

அந்தக் கூட்டத்துக்கு மலாய்க்காரர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். அதில் எம்பிஎம்- அரசியல் ஆளுமைப் பிரிவுத் தலைவர் முகமட் ஹில்மி இஸ்மாயில் பேசினார். அவர் தமது உரையில் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்  வெற்றி பெற்றால் மலேசியாவுடன் மீண்டும் இணையுமாறு சிங்கப்பூரை அது அழைக்கும் எனச் சொன்னதாக கூறப்படுகிறது.

“அவை சிங்கப்பூர் உட்பட 306 தொகுதிகளை உருவாக்கும். அடுத்து சீனர்கள் இந்த நாட்டை ஆட்சி புரிவர்,” என்றும் அவர் சொன்னார்.

“நாம் நசுக்கப்படுவோம். அடுத்து உலகம் முடிவுக்கு வரும் காலம் வரையில் கூட நாம் நமது நாட்டைத் திரும்பப் பெற முடியாது. ஏனெனில் அவர்கள் எல்லோரும் பன்றிகளை சாப்பிடுவர்,” முகமட் ஹில்மி சொன்னதாக கூறப்பட்டது.

முகமட் ஹில்மிக்கும் அப்துல் ரஹிமுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாங் கேட்டுக் கொண்டார். அவ்வாறு அது செய்யத் தவறினால் மக்களை பிளவுபடுத்தும் அந்தத் திட்டங்களில் அரசாங்கமும் பங்கு கொள்கிறது என்ற எண்ணத்தை வலுப்படுத்தி விடும் என்றார் அவர்.

ஆதரவைப் பெறுவதற்காக அரசாங்க ஊழியர்களும் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் வேண்டுமென்றே இனவாத உணர்வுகளை தூண்டி விடுவதாகத் தோன்றுகிறது,” என அந்த நிருபர்கள் சந்திப்பின் போது உடனிருந்த பிகேஆர் செனட்டர் சையட் ஹுசின் அலி கூறினார்.

“அதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொறுப்பேற்க வேண்டும் என நான் கருதுகிறேன், ஏனெனில் அவர் விரும்பினால் இதனை நிறுத்தி விடலாம்,” என்றார் அவர்.

மலேசிய சீனர்களுக்கு எதிராக மலேசிய மலாய்க்காரர்கள் வெறுப்புணர்வைத் தூண்டும் உரைகளாக அவை இருந்த போதிலும் மலாய்க்காரர்களுக்கு எதிராக சீனர்கள் வெறுப்புணர்வைத் தூண்டும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக சையட் ஹுசின் சொன்னார். அந்தப் பிரச்னையைத் தீர்க்கா விட்டால் இனக் கலவரங்கள் மூளும் என அவர் எச்சரித்தார்.

 

TAGS: