பெர்சே 3.0 பேரணியின் போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை விசாரிக்கும் சுயேச்சைக் குழுவுக்கு முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அறுவர் கொண்ட அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற ஐவரில் கல்வியாளர்களும் முன்னாள் நீதிபதிகளும் ஊடகப் பேராளர்களும் அடங்குவர்.
ஹனீப் இந்த நாட்டின் நான்காவது போலீஸ் தலைவர் ஆவார். அத்துடன் நீண்ட காலம் அந்தப் பதவியை வகித்துள்ள பெருமையும் அவருக்கு உண்டு.
1970ம் ஆண்டுகளில் தீவிரமான ஆர்ப்பாட்டக்காரர்களாகத் திகழ்ந்த கம்யூனிஸ்ட் அனுதாபிகள் பெர்சே 3.0 பேரணியில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் அண்மையில் கூறிய போது பெரும் சர்ச்சை எழுந்தது.
“ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாருடன் மோதுவதற்காக ‘தூண்டி விடும் ஏஜண்டுகளை’ பயன்படுத்துவது, காயம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் குழந்தைகளைக் கொண்டு வருவது போன்ற உபாயங்கள் கடந்த கால கம்யூனிஸ்ட் ஆதரவு ஆர்ப்பாட்டங்களின் போது கற்றுக் கொண்டவை ஆகும்,” என அவர் சொன்னதாகவும் கூறப்பட்டது.
பெர்சே 3.0 அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான புரட்சி முயற்சி என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறிக் கொண்டதையும் ஆதரித்ததற்காகவும் ஹனீப் மீது குறை கூறப்பட்டது.
பெர்சே 3.0 விசாரணைக் குழு குறித்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இன்று விடுத்தார். அடுத்த சில நாட்களில் அந்தக் குழு தனது முதலாவது கூட்டத்தை நடத்தும் போது அந்தக் குழு விசாரிக்க வேண்டிய அம்சங்கள் பற்றி முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
அந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் வருமாறு:
– முன்னாள் போர்னியோ தலைமை நீதிபது ஸ்டீவ் சிம்
– சினார் ஹரியான் நிர்வாக ஆசிரியர் ஹுஷாமுடின் யாக்கோப்
– மீடியா சைனீஸ் இண்டர்நேசனல் சட்ட அலோசகர் லியூ பெங் சுவான்
– பெட்ரோனாஸ் நிறுவன விவகார முதுநிலை தலைமை நிர்வாகி மேடான் அப்துல்லா
– தேசியப் பல்கலைக்கழக மனோவியல் பேராசிரியர் டாக்டர் ருஸ்மி இஸ்மாயில்