இந்தோனேசியாவில், 44 பேருடன் பறந்த ரஷ்ய பயணிகள் விமானம் நடுவானில் மாயமாகியது. ரஷ்யாவின் சுகோய் விமான நிறுவனம், இதுவரை போர் விமானங்களை மட்டுமே தயாரித்து வந்தது. தற்போது இந்த நிறுவனம் பயணிகள் விமானங்களை தயாரித்து வருகிறது. இப்படி தயாரிக்கப்பட்ட சுகோய் சூப்பர் ஜெட் விமானங்கள் இந்தோனேசியாவில் சோதனை ரீதியாக இயக்கப்பட்டு வருகின்றன. நூறு பயணிகள் வரை இந்த விமானத்தில் பயணிக்க முடியும்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து, இன்று மதியம் இந்த விமானம் 44 பேருடன் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட அரைமணி நேரத்திற்கு பிறகு இந்த விமானத்திலிருந்து தரைகட்டுப்பாட்டு தளத்திற்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.மேற்கு ஜாவாவில் உள்ள போகோர் என்ற இடத்தில் விமானம் மாயமானதாக கருதப்படுகிறது.
இதையடுத்து இரண்டு வானூர்திகள், விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அருகில் உள்ள மலை பகுதிகளில் தேடியும் விமானம் கிடைக்காததால் விமானம் விபத்துக்குள்ளானதாக அஞ்சப்படுகிறது. விமானம் காணாமல் போனதை ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.