மேலும் நான்கு பெர்சே ஆதரவாளர்கள் கைது

ஏப்ரல் 28ம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நால்வரையும் சேர்த்து இது வரை மொத்தம் 16 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய படங்கள் ஊடகங்கள் வழியாக வெளியிடப்பட்டிருந்தன.

20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட அந்த நால்வரும் பினாங்கு, சிரம்பான், பத்து பகாட் ஆகியவற்றில் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறையின் ஏஎஸ்பி அஸ்மி அஜிஸ் கூறினார்.

வன்முறையான அந்தப் பேரணியில் சம்பந்தப்பட்டதாக கூறப்படுவது தொடர்பான விசாரணைகளுக்காக அவர்கள் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்த கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர் கூ சின் வா, மேல் விவரங்களைத் தர மறுத்து விட்டார்.

போலீசார் ஊடகங்கள் வழியாக பேரணியில் பங்கேற்ற 141 பேர்களின் படங்களை ஊடகங்கள் வழியாக வெளியிட்டுள்ளனர். இது வரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் எட்டு பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பெர்னாமா