பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியலில் இரு தரப்பையும் சார்ந்த அரசியல் கட்சிகள் வாக்குகளைக் கவருவதற்காக வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அன்பளிப்புக்களையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் தங்கள் சமூகம் கவனிக்கப்படவில்லை என இந்தியத் தலைவர்கள் ஒலமிடுகின்றனர்.
2008 பொதுத் தேர்தலில் பொருட்படுத்த வேண்டிய சக்தியாக இந்திய வாக்காளர்கள் கருதப்பட்டனர். அந்தத் தேர்தலில் பிஎன் நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாக அனுபவித்து வந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது. ஆனால் இப்போது தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் எண்ணுகின்றனர்.
2004ம் ஆண்டு தோல்வியிலிருந்து புத்துணர்வுடன் மீண்ட எதிர்த்தரப்பு கூட்டணியான பக்காத்தான் ராக்யாட், 2008ல் அதிகமான இடங்களைப் பிடித்ததோடு ஐந்து மாநிலங்களின் கட்டுப்பாட்டையும் பெற்று ஆளுமையிலும் பங்கு கொண்டது.
என்றாலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களுடைய பேராதரவை எதிர்த்தரப்பு இழந்துள்ளதை பக்காத்தான் தலைவர் ஒருவர் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சமூகம் பிஎன்-னுக்கு எதிராக வாக்களித்து தனது மனக்குறைகளைக் கொட்டித் தீர்த்துக் கொண்டது.
“பக்காத்தானுக்குள் நாம் வலுவான இந்தியர் சக்தியை உருவாக்கவில்லை – இன அடிப்படையில் கட்சியை அமைக்க வேண்டும் என நான் சொல்லவில்லை- சமூகத்தைப் பாதிக்கின்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பணிக்குழு போன்ற அமைப்பு ஒன்றை தோற்றுவித்திருக்கலாம்.”
“2008 பொதுத் தேர்தலில் நமக்கு கிடைத்த ஆதரவை உறுதியாக வைத்திருக்க நாம் தவறி விட்டோம் என்பதை நான் மறுக்க முடியாது”, என்று நீண்ட கால டிஏபி உறுப்பினரும் முன்னாள் ஹிண்ட்ராப் என்ற முன்னாள் இந்து உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவருமான வி கணபதி ராவ் கூறினார்.
இந்திய சமூகம் சிறுபான்மை இனமாக இருந்தாலும் தேர்தல் வெற்றிகளை குறிப்பாக பக்காத்தானும் பிஎன்-னும் குறி வைத்துள்ள “திரிசங்குத் தொகுதிகளில்” உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
ஆழமாக வேரூன்றி விட்ட மனக் குறைகளினால் வெறுப்பு அடைந்து விட்ட இந்திய சமூகம்,2007ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி பேரணியை நடத்தியது. அதில் 30,000க்கும் மேற்பட்ட மலேசிய இந்தியர்கள் பங்கு கொண்டனர்.
அந்த மனக்குறைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. ஆனால் ஆளும் கூட்டணி அந்தப் பிரச்னைகளை பெரிதுபடுத்தியது. எதிர்த்தரப்பு அந்தப் பிரச்னைகளில் கடப்பாடு கொள்ளவில்லை என்னும் தோற்றம் உருவாக்கப்பட்டது என்றார் கணபதி ராவ்.
.
“பக்காத்தானில் உள்ள இந்திய தலைவர்கள் அடி நிலை உறுப்பினர்களைச் சந்திக்கவில்லை. களத்தில் இறங்கி வேலை செய்யவில்லை. சமூகத்தின் தேவைகளையே அவர்களில் பெரும்பாலோர் புரிந்து கொள்ளத் தவறி விட்டனர்.”
“கோலசிலாங்கூரில் பல தோட்டங்களில் மக்கள் இன்னும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். பந்திங்கிலும் போர்ட் கிளாங்கிலும் காப்பாரிலும் அதே நிலை காணப்படுகிறது.
பக்காத்தான் கை ஒங்கியுள்ளது
“பினாங்கில் மாநில நிர்வாகம் தங்கள் சமூகங்களைப் பிரதிநிதிக்கும் வகையில் இரண்டு துணை முதலமைச்சர்களைத் தேர்வு செய்துள்ளது. எடுத்துக்காட்டுக்கு ராமசாமியை மக்கள் தங்கள் பிரச்னைகளை சொல்வதற்கு நாடுகின்றனர்.”
அதே போன்று பக்காத்தான் மாநிலங்கள் நகர்ப்புற ஏழை மக்களுக்கு அவர்கள் சக்திக்கு ஏற்ற வீடுகளை வழங்குவதிலும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதிலும் அக்கறை காட்டவில்லை என கணபதி ராவ் தெரிவித்தார்.
பக்காத்தான் ராக்யாட் வெளிப்படையான போக்கைப் பின்பற்றுகிறது. நாம் நமது நண்பர்களுக்கு குத்தகைகளை வழங்குவதில்லை. ஆகவே நண்பர்களுக்கு உதவும் போக்கை விரும்புகின்றவர்கள் பிஎன் -னுக்குத் திரும்புவது பற்றி சிந்திப்பார்கள்.”
பினாங்கு பல இடர்பாடுகள் இருந்த போதிலும் பல்வேறு இன சமூகங்களை அரவணைப்பதில் வெற்றி கண்டுள்ளது. அதனை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் என்றும் கணபதி ராவ் சொன்னார்.
“இந்தியர்களும் சீனர்களும் சீர்திருத்தங்களை நாடுகின்றனர். அவர்கள் உண்மையான கொள்கைகளையும் அரசியல்வாதிகளையுமே காண விரும்புகின்றனர். அதனை நிறைவேற்றுவதற்கு பக்காத்தான் கைகள் மேலோங்கியுள்ளன. பினாங்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பிஎன் அந்த மாநிலத்தைமீண்டும் கைப்பற்ற முடியாது என்பதை மெய்பித்துள்ளது”, என அவர் மேலும் சொன்னார்.
நாட்டில் மொத்தம் உள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 64 தொகுதிகளில் இந்திய வாக்காளர்கள் கணிசமாக இருக்கின்றனர். அவர்கள் எந்தத் தரப்பின் வெற்றியையும் நிர்ணயிக்க முடியும்.
வழக்கமாக பிஎன் 10 நாடாளுமன்றத் தொகுதிகளை இந்தியர்களுக்காக ஒதுக்கும். அதில் 9 மஇகாவுக்கும் 1 பிபிபி கட்சிக்கும் கொடுக்கப்படும்.
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பெரும்பான்மை இந்திய வாக்காளர்கள் பிஎன் னுக்குப் பாதுகாப்பான வைப்புத் தொகை எனக் கருதப்பட்டனர். ஆனால் தேர்தலுக்கு முன்னதாக ஹிண்ட்ராப் தலைமையில் நடத்தப்பட்ட பேரணியில் 30,000 பேர் பங்கு கொண்ட பின்னர் அந்த நிலைமை மாறி விட்டது.
அதன் விளைவாக பிஎன் நாடாளுமன்றத்தில் தனது மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை இழந்தது. பிரதமர் அப்துல்லா அகமட் படாவியும் கூட பதவி துறக்க நேரிட்டது.
ஹிண்ட்ராப் இனிமேல் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது
அடுத்த தேர்தலில் ஹிண்ட்ராப் ஒரு சக்தியே அல்ல என கணபதி ராவ் சொன்னார்.
“பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் வெற்றிக்கான வாக்குகள் எங்கிருந்து கிடைத்தன என்பதையே மறந்து விட்டனர். வாக்குகளை ஈர்க்க அவர்கள் “மக்கள் சக்தி” சுலோகத்தைப் பயன்படுத்தினார்கள். ஆனால் சமூகத்தின் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை.”
“நஜிப் சமூகத்தை நேரடியாக அணுகுகிறார். இந்தியர்கள் மாற்றத்தை விரும்பினாலும் பக்காத்தானுக்கு வாக்களிப்பது பற்றி ஐயம் கொண்டுள்ளனர்”, என்றார் அவர்.
இந்திய இளைஞர்கள் தீய வழிகளிலும் சமூக சீரழிவுகளிலும் மூழ்கியுள்ள வேளையில் இந்திய அரசியல்வாதிகள் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள், கோவில்கள் பற்றி மட்டுமே அக்கறை காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“நாம் மீண்டும் போராட வேண்டும் என நான் சொல்லவில்லை. ஆதரவை மீண்டும் வலுப்படுத்த முடியும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது,”என கணபதி ராவ் சொன்னார்.
பக்காத்தானுக்கான ஆதரவு நலிவடைந்ததில் தமக்கும் பங்கு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.
“டாக்சி விஷயத்தை நாங்கள் எழுப்பினோம். ஆனால் டாக்சி ஓட்டிகளுக்கு பிஎன் போராடுவதாக இப்போது தோன்றுகிறது. அது போன்ற விஷயங்கள் நமக்கு ஆதரவை அதிகரிக்க உதவும்.”
“எடுத்துக்காட்டுக்கு தோட்டத் தொழிலாளர்களை எடுத்துக் கொள்வோம். நாம் குறைந்த பட்ச சம்பளத்துக்காக போராடுகிறோம். தோட்டங்கள் அழிக்கப்பட்டு அவர்கள் செல்வதற்கு இடமில்லாமல் போகும் போது நாம் அவர்களுக்கு புதுக் கிராமம் வேண்டும் என யாரும் கேட்க விருபவில்லை.”
தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் பேராளர்கள் “சிறிய படத்தையும்” பார்க்க வேண்டும். “பெரிய படங்கள்” மீது மட்டும் கவனம் செலுத்தக் கூடாது.”
“மாநிலத்தை ஆளும் போது மக்களுக்கு உதவுவதற்கான வழிகளை நாம் ஆராய வேண்டும். 2008ல் பிஎன் பணத்தை வாரியிறைத்த போதிலும் இந்தியர்கள் நம்மை ஆதரித்தார்கள், அப்போது ஆதரவு இருந்தது. அது ஏன் குறைந்து விட்டது என்ற கேள்வியையே நாம் இப்போது எழுப்ப வேண்டும்.”
“நாம் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை நாம் சொல்ல வேண்டும். இன உறவுச் சட்டம் அல்லது சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டத்தை நாம் அறிமுகம் செய்ய வேண்டும். அவர்களுக்கு நன்மை அளிக்கும் கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும்.”
“எங்களை ஆதரிப்பதின் மூலம் நாங்கள் உங்களுக்கு சிறந்த ஆளுமையைக் கொண்டு வருவோம் எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது”, என கணபதி ராவ் மேலும் குறிப்பிட்டார்.