அம்பிகா: அது எனது தனிமையை ஆக்கிரமிப்பதாகும்

ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியால் தங்களுடைய வருமானம் பாதிக்கப்பட்டு விட்டது என்று கூறிக்கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இக்லாஸ் என்ற அமைப்பு பர்ஹர் கடையை பெர்சே அமைப்பின் இணைத் தலைவரான அம்பிகாவின் வீட்டிற்கு வெளியில் போட்டதை அவர் கண்டித்தார்.

இச்சம்பவம் தமது தனிமையையும் இல்லத்தையும் ஆக்கிரமிப்பதாகும் என்று வர்ணித்த அவர், இது இந்நாட்டிற்கு ஒரு “மிதமிஞ்சிய முன்னோடி” என்று கூறினார்.

“இதனை அதிகாரத்தினர் ஏற்றுக்கொண்டால், அமைச்சர்கள் கவனமுடன் இருக்க வேண்டி வரும், ஏனென்றால் அடுத்து அவர்களின் வீட்டின் முன் மக்கள் நிற்பார்கள்”, என்று கூறிய அம்பிகா, இச்சூழலை மக்களின் தீர்ப்புக்கே விட்டுவிடுவதாக அவர் மேலும் கூறினார்.

தமது குடும்பம் குறித்து கவலை தெரிவித்த அவர், இதற்கு தாம் பயப்படவில்லை என்று அம்பிகா வலியுறுத்திக் கூறினார்.

“எனக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்று பாருங்கள்”, என்று பெர்சேயுடன் இணைந்துள்ள பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகளின் தலைவர்கள் அவருடன் இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

அம்பிகாவுக்கு தங்களுடைய ஆதரவைத் தெரிவிக்க கூடியிருந்தவர்களில் மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன், மாதர் உதவி மன்றத்தின் ஐவி ஜோசியா, பெர்சே வழிகாட்டல் குழு உறுப்பினர் மரியா சின் ஆகியோரும் அடங்குவர்.

“இது அச்சுறுத்தலாகும். நான் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.

“மலேசியாவில் இதற்கு முன்னர் இது நடந்ததில்லை, விலக்கு லிம் குவான் எங் ஆவார். இப்போது அவருடைய மற்றும் எனது இல்லங்கள் வரம்புமீறல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன”, என்று கூறிய அவர் பினாங்கு முதலமைச்சரின் வீட்டின் முன் இன்று முன்னேரத்தில் மலாய உரிமைகள் போராட்ட குழுவான பெர்காசா நடத்திய “ஈமைச் சடங்குகள்” பற்றி குறிப்பிட்டார்.

அந்த வணிகர்களுக்கு கோரிக்கை வைப்பதற்கான உரிமை உண்டு என்பதை ஒப்புக்கொண்ட அம்பிகா, எந்தத் தகவலும் இல்லாத வேளையில் எப்படி பதில் கூறுவது என்று அவர் வினவினார். “ஒரு துண்டு காகிதம் கூட என்னிடம் கொடுக்கப்படவில்லை. இப்படி இருக்கையில் நான் எதற்கு பதில் கூறுவது?

வணிகர்கள் அவர்களுடைய கோரிக்கைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முழு உரிமை உண்டு, அவர்கள் விரும்பினால் அவர் மீது வழக்கு தொடரலாம் என்று கூறிய அம்பிகா, “அவர்களுக்கு ஈடு கோரும் தகுதி உண்டா என்தை நீதிபதி தீர்மானிக்கட்டும்”, என்றார்.

“ஆனால், அவர்கள் என் வீட்டிற்கு வந்து இம்மாதிரியான முறையில் நடந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை”, என்பதை அவர் வலியுறுத்தினார்.

தாம் உடனடியாக போலீஸ் புகார் செய்யப்போவதாக அவர் கூறினார். “போலீஸ் புகார் செய்ய வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு…இது இக்குடியிருப்பு வட்டாரம் மற்றும் எனது குடும்பம் சம்பந்தப்பட்டதாகும்.”

இச்சம்பவம் நடந்தபோது போலீசார் தங்களுடைய ரோந்து வண்டியில் இருந்தனர், ஆனால் அவர்கள் இக்லாஸ் உறுப்பினர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையிம் எடுக்கவில்லை.

அதிர்ச்சி: முன்னாள் ஐஜிபி தமையில் விசாரணைக் குழு

பெர்சே 3.0 இன் போது நிகழ்ந்தாக கூறப்படும் வன்செயல்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சுயேட்சை விசாரணைக்குழுவின் தலைவராக முன்னாள் ஐஜிபி ஹனிப் ஒமார் நியமிக்கப்பட்டிருப்பதற்கான தமது எதிர்ப்பை அம்பிகா மீண்டும் வலியுறுத்தினார்.

கம்யூனிச ஆதரவாளர்கள் அப்பேரணியில் இருந்தனர் என்று அவர் கூறியிருந்த கருத்து அவரை அப்பதவிக்கு தகுதியற்றவராக்கி விட்டது என்பதை அவர் வலியுறுத்தினார்.

“(ஹனிப்) சட்டம் படித்திருக்கிறார், ஆகவே அவர் கூறிய கருத்து அவரை அப்பதவிக்கு தகுதியற்றவராக்கி விட்டது என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.”

அந்த விசாரணைக்குழுவில் மனித உரிமைகள் மீதான நிபுணர்கள் இல்லாதிருப்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். அக்குழுவின் மீது நம்பிக்கை இல்லாததின் காரணமாக, அதன் விசாரணையில் பெர்சே சம்பந்தப்பட வேண்டியது குறித்து அவர்கள் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

பேரணியின்போது போலீசார் மேற்கொண்ட வன்முறைகள் குறித்த பிரச்னையைத் தீர்ப்பதில் அரசாங்கம் மனமார்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருக்குமானால், வேறொரு விசாரணைக் குழுவை அமைப்பதற்கான நேரம் இன்னும் கடந்துவிட வில்லை என்று மரியா சின் அப்துல்லா கூறினார்.

இருப்பினும், அந்த விசாரணைக்குழுவிற்கு சுஹாகாம் தலைமையேற்கவேண்டும் மற்றும் ஐநாவின் ஃபிரேங் வில்லியம் லா ரு அந்தக்குழுவுக்கு உதவ முன்வந்துள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் பெர்சே விடாப்பிடியாக இருக்கிறது.

 

TAGS: