சுமத்ராவில் காடுகள் எரிவது பற்றி கோலாலம்பூர் கவலை தெரிவித்துள்ளது

சுமத்ராவில் அதிகமான வெப்பத்துடன் 600 இடங்களில் காடுகள் எரிவது குறித்து கவலை தெரிவிக்கும் கடிதம் ஒன்றை மலேசியா இந்தோனிசியாவுக்கு அனுப்பியுள்ளது.

துணைக்கோளம் வழியாக பிடிக்கப்பட்ட தோற்றங்கள் காடுகள் எரியும் இடங்களைக் கண்டு பிடித்துள்ளன.

இந்தோனிசிய சுற்றுச்சூழல் அமைச்சர் பேராசிரியர் டாக்டர் குஸ்டி முகமட் ஹட்டாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக இயற்கை வள சுற்றுச்சூழல் அமைச்சர் டக்ளஸ் உகா எம்பாஸ் கூறினார்.

என்றாலும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தோனிசியா தன்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறது என மலேசியா நம்புவதாக அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

“உண்மையில் கடந்த சில ஆண்டுகளாக அது காடுகள் எரிவதைக் கட்டுப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.”

செப்டம்பர் 18ம் தேதி பாங்காக்கில் நிகழும் ஆசியான் அமைச்சர் நிலை செயற்குழுக் கூட்டத்தில் தாம் இந்தோனிசிய சுற்றுச்சூழல் அமைச்சரைச் சந்திக்கப் போவதாகவும் உகா சொன்னார்.

புகை மூட்டத்துக்கு பருவக் காற்று காரணம் என வலியுறுத்திய அவர், அது சுமத்ராவில் காடுகள் எரியும் பகுதிகளிலிருந்து புகையை மலேசியாவின் பல பகுதிகளுக்குக் கொண்டு வந்து விட்டதாகக் குறிப்பிட்டார். 1997ம் ஆண்டும் 2005ம் ஆண்டு காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு மிக அதிகமாக உயர்ந்ததுடன் ஒப்பிடுகையில் இந்த முறை அவ்வளவு கடுமையாக இல்லை என்றும் உகா சொன்னார்.