பெர்சே 4.0 பேரணியை நடத்துவதற்கான திட்டம் ஏதும் இப்போதைக்கு இல்லை எனத் தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்கு போராடும் கூட்டமைப்பின் கூட்டுத் தலைவரான அம்பிகா ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ளார்.
“பெர்சே 4.0 பேரணியை நடத்துவதற்கான திட்டம் எதனையும் எனது தரப்பு சிந்திக்கவில்லை,” என அவர் மலாய் நாளேடான சினார் ஹரியானிடம் கூறினார்.
“தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்குத் தொடர்ந்து போராடுமாறு அந்த அரசு சாரா அமைப்பை பல தரப்புக்கள் கேட்டுக் கொண்ட போதிலும் அடுத்த பேரணியை நடத்தும் விவகாரம் மீது எந்தத் திட்டத்தையும் பெர்சே கொண்டிருக்கவில்லை.”
“பெர்சே 4.0 யோசனைக்கு பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், பிகேஆர், பல அரசு சாரா அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது எனக்குத் தெரியும். என்றாலும் இப்போதைக்கு அதற்கான திட்டம் ஏதுமில்லை.”
என்றாலும் பெர்சே கூட்டணியின் மற்ற திட்டங்களை அறிவிப்பதற்காக அந்த அமைப்பு விரைவில் நிருபர்கள் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும் என்ற தகவலை அம்பிகா வெளியிட்டார்.
நான்காவது பெர்சே பேரணி நடத்தப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்கவும் அதில் கலந்து கொள்ளவும் தயாராக இருப்பதாக நிக் அஸிஜும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் ஏற்கனவே கூறியுள்ளனர்.