விடுதலை நம்பிக்கை குலைந்ததும் உண்ணாவிரதப் போராட்டம்

ஹாஜ்ஜா சிபி வீராவு பேரப் பிள்ளை ஒன்று மடியில் வைத்துக் கொண்டு தம்முடைய மூத்த பிள்ளை எழுதிய பல கடிதங்களை காட்டினார்.

“தாங்கள் விடுதலை செய்யப்படுவோம் என அவர்கள் மிக்க நம்பிக்கை வைத்திருந்தனர்” என கமுந்திங் தடுப்பு மய்யத்திலிருந்து சிறைச்சாலை வழங்கிய தாளில் தமது புதல்வரான முகமட் பாட்சுல்லா அப்துல் ரசாக் எழுதிய கடிதங்களைக் காட்டிய போது 51 வயதான அவர் சொன்னார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விடுதலை கோரி கடந்த வாரம் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய பல கைதிகளில் முகமட் பாட்சுல்லாவும் ஒருவர் ஆவார்.

தமது புதல்வர் குறித்தும் அந்த உண்ணாவிரதம் குறித்தும் அவர் பேசிய போது அவரது குரலில் தடுமாற்றம் தெரிந்தது.

என்றாலும் அந்த உண்ணாவிரதத்தை கைவிடுமாறு நான் அவருக்கு ஒரு போதும் அறிவுரை கூற மாட்டேன்,” என அந்த மாது உறுதியாகத் தெரிவித்தார், இசா சட்டம் ரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள் விடுவிக்கப்படுவோம் என மிக்க நம்பிக்கையுடன் அந்தக் கைதிகள் இருந்தனர் என தமது புதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக அவர் சொன்னார்.

பாட்சுல்லா வாரம் ஒரு முறை கடிதம் எழுதி வந்தார். அந்தக் கடிதங்கள் சில சமயங்களில் ஆறுதலாகவும் சில சமயங்களில் வருத்தமளிப்பதாகவும் இருக்கும்.

இசா சட்டம் முடிவுக்கு வருவதாக பிரதமர் அறிவித்த பின்னர் எழுதிய கடிதத்தில் பாட்சுல்லா,” இப்போது கிசுகிசுக்கள் அதிகரித்துள்ளன. தாங்கள் எப்போது விடுவிக்கப்படுவோம் என்பது பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  இன்னும் ரத்துச் செய்யப்படவில்லை. நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டியுள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

2011ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் எழுதிய கடிதம்: “இசா கைதிகளின் நிலை தெரியவில்லை. எங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் நாங்கள் விடுவிக்கப்படுவோம். அல்லாஹ்-விற்கு மட்டுமே அது தெரியும்.”

“அதற்கு நேர்மாறாகவும் நடக்கலாம். எல்லாம் எங்களுக்குத் தெரியாமல் நடக்கிறது. ஆரூடம் சொல்வது சிரமமாகும். அது தான் இசா சட்டம்.”

2010ம் ஆண்டு ஜுலை 15ம் தேதியிலிருந்து பாட்சுல்லா வீட்டுக்கு வரவில்லை.

“நான் ஏன் அழவில்லை எனக் கேட்கின்றனர். அழுவதால் எதுவும் மாறப் போவதில்லை. ஆகவே நான் இந்த நிலையை கடப்பதற்கும் அவருக்கும் எனக்கும் வலிமையைத் தருமாறு கோரி தொழுகிறேன்,” என்றும் ஹஜ்ஜா சிபி வீராவு கூறினார்.

“நான் அவரையும் அவருடைய நண்பர்களையும் ஆதரிக்கிறேன். காரணம் விடுதலைக்கு வேறு வழி இல்லை என உணர்ந்ததால் அவர்கள் அதனைத் தேர்வு செய்தது எனக்குத் தெரியும்,” என்றார் அவர்.