பள்ளிக்கூடங்களில் மலேசிய இந்திய மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் பல்வேறு மிரட்டல் சம்பவங்களை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு மிரட்டுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.
அந்த சமூகத்தைச் சார்ந்த மாணவர்களை நோக்கமாகக் கொண்டு இரண்டு வகையான அத்துமீறல்கள் “தேசிய ரீதியில் வேகமாக அதிகரித்து வருவதாக” அதன் மூத்த தலைவர் பி உதயகுமார் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதம் கல்வி அமைச்சர் முஹைடின் யாசின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் ஆகியோருக்கு முகவரியிடப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் நிகழ்ந்துள்ள- இன அடிப்படையைக் கொண்டவை எனக் கூறப்படும் வன்முறைச் சம்பவங்களையும் அத்துமீறல்களையும் அவர் அந்தக் கடிதத்தில் விவரித்துள்ளார்.
உதயகுமார் தெரிவித்துள்ள சம்பவங்களில் சில, மக்கள் ஒசை, தமிழ் நேசன், மலேசிய நண்பன், மலாய் மெயில், சினார் ஹரியான் ஆகியவற்றில் வெளி வந்தவை ஆகும்.
மற்ற சம்பவங்கள் நேரடியாக ஹிண்ட்ராப் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டவை.
ஐந்து சம்பவங்களில் மலாய்ச் சிறுவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று சம்பவங்கள் மலாய் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டவை எனக் கூறப்பட்டது. அதில் ஒரு சம்பவத்தில் சிலாங்கூரில் ஆசிரியர் ஒருவர் பேனா ஒன்றை மாணவருடைய நெற்றியில் ரத்தம் வரும் அளவுக்குக் குத்தியதாக சொல்லப்படுகிறது.
இன்னொரு சம்பவம் மாணவர் குழு ஒன்றை ஆசிரியர் “இந்து பறையா” என திட்டியதாக சொல்லப்படுகிறது. அந்தச் செய்தி நேற்று பிரி மலேசியா டூடே செய்தி இணையத் தளத்தில் வெளியாகியுள்ளது.
கடைசியாக உதயமூர்த்தி, இண்டர்லாக் நாவலின் பிரதிகளை பள்ளிக்கூடத் தலைமையாசிரியரிடம் திரும்ப ஒப்படைக்க முயன்ற மூன்று மலேசிய இந்திய மாணவர்கள் கோலா குபு பாரு மாவட்டப் போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு 10 மணி நேரத்துக்கு விசாரிக்கப்பட்டதை எடுத்துக் காட்டியுள்ளார்.
போலீசாரும் கல்வி அதிகாரிகளும் அந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காதது குறித்து உதயகுமார் வருத்தம் தெரிவித்தார். “பாதிக்கப்ப்பட்டவர்கள் பலம் இல்லாதவர்களாகவும் இந்திய ஏழை மக்கள் இலகுவான இலக்குகளாகவும் இருந்ததே” அதற்குக் காரணம் என்றார் அவர்.
“ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மலாய் முஸ்லிம்களாக இருந்தால் போலீசும் கல்வித் துறையும் முழு மூச்சாக நடவடிக்கையில் இறங்கி ஏழை இந்திய மாணவர்களை கைது செய்து, வழக்குத் தொடர்ந்து நீக்கியிருப்பார்கள்.”
அரசாங்கத்தின் ஒரே மலேசியா சுலோகம் பெரிய அளவில் முழங்கப்பட்ட போதும் ‘இனவாதம்’ ஏன் இன்னும் ‘தொடருவதற்கு’ அனுமதிக்கப்படுகிறது என உதயகுமார் வினவினார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக பொருத்தமான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் ஹிஷாமுடின், முஹைடின், இஸ்மாயில் ஆகியோரைக் கேட்டுக் கொண்டார்.
“அத்துடன் எல்லா வகையான வன்முறைகள், மருட்டல்கள், இனவாதம் ஆகியவற்றுக்கு முடிவு கட்டுமாறு குறிப்பாக ஏழை இந்தியர்களுக்கு எதிராக அவை நடத்தப்படுவதை நிறுத்துமாறு சுற்றறிக்கை வெளியிட வேண்டும்,” என அவர் மேலும் சொன்னார்.