வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு வாக்குரிமை கிடைக்கலாம்

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு வகை செய்யும் பொருட்டு இசி என்ற தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தின் வரும் ஜுன் மாதக் கூட்டத்தில் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய எண்ணியுள்ளது.

“எங்கள் இலக்கு ஜுன் கூட்டத் தொடர்,” இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார், நேற்றிரவு கோலாலம்பூரில் அந்நிய நிருபர்கள் மன்றத்துடன் நடத்திய கலந்துரையாடலின் போது கூறினார்.

இசி முன்மொழிய எண்ணியுள்ள திருத்தங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவதற்கு இரண்டு நிபந்தனைகளை விதிக்கும்.

முதலாவதாக அந்த நபர் இசி-யில் சாதாரண வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டாவதாக அந்த நபர் அஞ்சல் வாக்காளராகத் தகுதி பெறுவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறையாவது மலேசியாவுக்குத் திரும்பியிருக்க வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து வாக்களிக்க விரும்புவோர் இசி இணையத் தளத்தில் கிடைக்கும் பாரம் ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படலாம்.

தகுதி பெற்ற அஞ்சல் வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்குகளை விநியோகம் செய்யும் பொறுப்பு  மலேசியத் தூதரகங்களுக்கு வழங்கப்படும்.

அடுத்து தங்களது வாக்குச் சீட்டுக்கள் மலேசியாவில் உள்ள அவற்றின் தேர்தல் அதிகாரிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்வது அந்த வாக்காளர்களின் பொறுப்பாகும்.

“தேர்தல் நாளன்று மாலை 5.00 மணிக்குள் அந்த வாக்குச் சீட்டுக்கள் தேர்தல் அதிகாரிகளுக்குக் கிடைக்க வேண்டும்,” என வான் அகமட் விளக்கினார்.

என்றாலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தின் ஜுன் மாதக் கூட்டத் தொடருக்கு முன்னதாக தேர்தலை நடத்த முடிவு செய்தால் புதிய முறை 13வது பொதுத் தேர்தலில் அமலாக்கப்பட முடியாது என அவர் சொன்னார்.

 

TAGS: