அம்பிகாவின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைவதற்கு முயற்சி செய்யப்பட்டதா என சந்தேகிக்கப்படுகிறது

பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுடைய அலுவலகத்துக்குள் செல்வதற்கான நுழைவு கார்டுகள் செலுத்தப்படும் கட்டுப்பாட்டு பெட்டி சிதைக்கப்பட்டுள்ளது.

அதனால் டமன்சாராவில் உள்ள அம்பிகாவின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்னும் சந்தேகம் தோன்றியுள்ளது.

நுழை வாயிலுக்குள் செல்வதைக் கட்டுப்படுத்தும் அந்தப் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது இன்று காலை எட்டு மணி அளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக அம்பிகா சொன்னார்.

“என் ஊழியர்கள் முதலில் அதனைப் பார்த்தனர். டிராவர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்,” என அம்பிகா தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

“அந்தக் காரியத்தை செய்தவர்கள் பயந்து விட்டனரா, எப்படி அது நிகழ்ந்தது அல்லது வேறு எந்த விஷயத்துடனாவது அது தொடர்புடையதா என்பதும் எங்களுக்குத் தெரியாது.”

ஏப்ரல் 28ம் தேதி தூய்மையான நேர்மையான தேர்தல்களுக்கான பெர்சே 3.0 பேரணி நடைபெற்ற பின்னர் டமன்சாராவில் உள்ள அம்பிகா வீட்டுக்கு முன்னாள் பெர்சே எதிர்ப்புக் குழுக்கள் இது வரை இரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.