எல்லாக் கட்சிகளும் கலந்துகொள்ளும் பொது விவாதங்கள் நடத்த இசி ஆலோசனை

எல்லாக் கட்சிகள் பற்றிய செய்திகளும் ஊடகங்களில் நியாயமான அளவில் இடம்பெறுவதை உறுதிப்படுத்த பொதுவிவாதங்களை ஏற்பாடு செய்து அவற்றில் போட்டியிடும் கட்சித் தலைவர்களைப் பங்கேற்க வைக்கலாமா என்று தேர்தல் ஆணையம்(இசி) ஆலோசிக்கிறது.

“மற்ற நாடுகளில் நடப்பதுபோல் தேர்தலில் போட்டியிடும் கட்சித் தலைவர்களுக்கிடையில் பொதுவிவாதங்களுக்கு இசி ஏற்பாடு செய்யக்கூடும்.” நேற்றிரவு  கோலாலம்பூரில் வெளிநாட்டு நிருபர்கள் மன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் இவ்வாறு கூறினார்.

தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்ற தேர்வுக்குழு(பிஎஸ்சி) பரிந்துரைத்த 22 பரிந்துரைகளில் ஒன்றான தேர்தல் பரப்புரைக்காலத்தின்போது எல்லாக் கட்சி செய்திகளுக்கும் அரசு ஊடகங்களில் நியாயமான இடமளிக்க வேண்டும் என்பதை இசி எப்படி  உறுதிப்படுத்தப்போகிறது என்று அவரிடம் வினவப்பட்டது. 

இதன் தொடர்பில்  தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் இசி பேசியிருப்பதாகவும் அடுத்து அது அமைச்சர் ரயிஸ் யாத்திமைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் வான் அஹ்மட் கூறினார்.

பொதுவிவாதங்கள் தவிர்த்து வேறு என்னென்ன பரிந்துரைகளை இசி அமைச்சிடம் முன்மொழியும் என்று ஊடகவியலாளர்கள் பலதடவை வினவியும்கூட அவர் பதில் அளிக்க மறுத்தார்.

“அந்தப் பரிந்துரையை இங்கு  அறிவிக்க இயலாது……அது அரசாங்கத்துக்குக் காண்பிக்கும் மரியாதை ஆகாது”, என்றவர் விளக்கினார்.

வெளிநாட்டவருக்குக் குடியுரிமை

வெளிநாட்டவர் பலருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டு வாக்குரிமையும் வழங்கப்பட்டிருப்பது பற்றியும் அவரிடம் கேட்கப்பட்டது.அது தமக்கு வியப்பளிக்கவில்லை என்று கூறிய வான் அஹ்மட், 1970களில் வெளிநாட்டினர் பலர் மலேசியாவுக்குத் தோட்டங்களில் பணிபுரிய வந்தார்கள், வந்தவர்கள் நிரந்தர குடியிருப்புக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தார்கள், முடிவில் குடியுரிமையும் பெற்றிருக்கிறார்கள் என்றார்.

“12 ஆண்டுகள் நிரந்தரக் குடியிருப்பாளராக இருந்த பின்னர், அரசமைப்பின்கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகுதியை அவர்கள் பெறுகிறார்கள்….அப்படிப் பலர் குடியுரிமை பெற்றிருக்கக் கூடும் என்பதால் அது எனக்கு வியப்பளிக்கவில்லை”, என்று விளக்கினார்.

குடியுரிமை வழங்குவதும் அவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து வைப்பதும் தேசிய பதிவுத் துறையின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்றாரவர்.

மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வுத் திட்ட(மெராப்) இயக்குனர் ஒங் கியான் மிங்கும்(வலம்) அங்கிருந்தார்.

அவர், வான் அஹ்மட்டிடம் கடந்த இரண்டு காலாண்டுகளாக வாக்காளர் துணைப் பட்டியலில் தொகுதி மாற்றம் செய்யப்பட்ட வாக்காளர்கள் பற்றிய தகவல்கள் விடுபட்டிருப்பது ஏன் என்று வினவினார்.

முன்பெல்லாம் குறிப்பிட்ட ஒரு தொகுதியில் வாக்காளரின் பெயர் நீக்கப்பட்டால் அவர் என்ன ஆனார், இறந்துவிட்டாரா, இராணுவத்தில் சேர்ந்துவிட்டாரா, முகவரியை மாற்றிக்கொண்டாரா என்பன போன்ற விவரங்கள் துணைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.ஆனால், 2011 நான்காம் காலாண்டுக்குப் பிறகு இப்படிப்பட்ட விவரங்கள் காணப்படவில்லை என்று ஒங் கூறினார்.

அதேபோல், வாக்காளர்களின் சமயம், இனம், வாக்காளர் பட்டியலில் அவரின் தொடர் எண் போன்றவற்றையும் அவர்கள் எப்படி வாக்காளரானார்கள் என்பதைப் பற்றிய தகவல்களையும் இசி வெளியிடுவதில்லை என்றும் அவர் சொன்னார்.

ஒங்கின் வினாக்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்த வான் அஹ்மட், அவருடைய சந்தேகங்களுக்கு விடைகாண இசி அலுவலகத்துக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

“அங்கு வந்தீர்களானால், உங்களின் ஒவ்வொரு கேள்விக்கும் தகுந்த விளக்கமளிப்போம்.வாக்காளர் பட்டியலைச் சீர்படுத்த ஒன்றிணைந்து பாடுபடலாம்”, என்றார்.

ஒங், இசி அதிகாரிகளைச் சந்திப்பதில் தமக்கு ஆர்வமில்லை என்றார். தாம் உள்பட ஆய்வாளர் குழுவொன்று வாக்காளர் பட்டியலைச் சீர்படுத்தும் பரிந்துரைகளை 2003-இலேயே இசியிடம் சமர்ப்பித்ததாகவும் ஆனால் அவை அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

“அதனால், அது பற்றி வெளிப்படையாக பேசுவதையே விரும்புகிறேன்.அப்போதுதான் விவகாரத்தைப் பொதுமக்களும் புரிந்துகொள்வார்கள்”, என்று ஒங் குறிப்பிட்டார்.

TAGS: