சிலாங்கூர் சொந்தமாக எஃப் வகுப்பு உரிமங்களை வெளியிடும்

சிலாங்கூர் அரசு, மாநில அரசின் குத்தகைகளைப் பெறுவதில் எல்லாக் குத்தகையாளர்களும் போட்டியிட வாய்ப்பளிக்கும் வகையில் சொந்தமாகவே பூமிபுத்ரா நிறுவனங்களுக்கும் பூமிபுத்ரா-அல்லாதார் நிறுவனங்களுக்கும் எஃப் வகுப்பு குத்தகை உரிமங்களை வழங்கும்.

“இத்திட்டத்தின்கீழ் எல்லாக் குத்தகையாளர்களுக்கும் சிலாங்கூரின் எஃப் வகுப்பு குத்தகை உரிமம் வழங்கப்படும்.இதற்கு வகை செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் முன்மொழிந்திருக்கிறேன்”, என்று ஆட்சிக்குழு உறுப்பினரான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதற்கு ஒப்புக்கொள்ளவைப்பது கடினமாகத்தான் இருந்தது என்று கூறிய ஜெயக்குமார், என்றாலும் முடிவு செய்யப்பட்டு விட்டது, இனி சிலாங்கூரிலாவது “அனைவரும் குத்தகைகளைப் பெறுவார்கள்”, என்றார்.

மலேசிய இந்தியர் வணிகச் சங்கமான, மீபா ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது ஜெயக்குமார் இத்தகவலை வெளியிட்டார்.

அக்கருத்தரங்கில், அதற்குமுன்னர் நடந்த ஒரு அமர்வில், பார்வையாளர் ஒருவர், அரசாங்கக் குத்தகைகளைச் சீனர் அல்லது இந்தியருக்குச் சொந்தமான நிறுவனங்கள் பெறும் காலம் வருமா என்று எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் நோக்கில் ஜெயக்குமார் அவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்வழி மேலும் பல நிறுவனங்களுக்குக் குத்தகைகளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்றாரவர்.

சிலாங்கூர் அரசு,  கிள்ளான் ஆறு மறுசீரமைப்புத் திட்டம். தஞ்சோங் டூவா பிலாஸ், புக்கிட் பெருந்தோங், ஈஜோக் குடியிருப்பு மற்றும் நகர மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற பல பெரிய திட்டங்களுக்கு டெண்டர் விண்ணப்பங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

“இதற்கான பாரங்களை சிலாங்கூர் மாநிலப் பொருளாதாரத் திட்டப் பிரிவில் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.இந்தக் குத்தகைகளைப்  பெறுவதற்கான குறைந்த பட்சத் தகுதி என்னவென்றால் ஒருவர் நிதி  அமைச்சில் அல்லது சிஐடிபி(கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம்)-இல் பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும்”, என்றவர் விளக்கினார்.

எஃப் வகுப்பு உரிமம் பற்றிய இந்த அறிவிப்பு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.இது எல்லாக் குத்தகையாளர்களும் அரசாங்கக் குத்தகைகளைப் பெற வாய்ப்பளிக்கும்.

மத்திய அரசு எஃப் வகுப்பு உரிமம் வழங்குவதை நீண்ட காலமாக முடக்கி வைத்துள்ளது.இதனால் பல நிறுவங்கள் குறிப்பாக பூமிபுத்ரா நிறுவனங்கள் அரசாங்கக் குத்தகைப் பணிகளைப் பெறப் போட்டியிட முடியாமல் போகிறது.

100 விழுக்காடு பூமிபுத்ராக்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மட்டுமே அரசாங்கக் குத்தகைகளைப் பெற விண்ணப்பிக்க முடியும் என்ற மத்திய அரசின் நிபந்தனையால் பல சிக்கல்கள் உண்டாகியிருப்பதாக பல வட்டாரங்கள் குறைகூறியுள்ளன.

அரசாங்கக் குத்தகைகள் பூமிபுத்ராக்களுக்குக் கொடுக்கப்படுவது, அரசமைப்பு உத்தரவாதமளிக்கும்  மலாய்க்காரர் சிறப்பு நிலையை நிலைநிறுத்த உதவுகிறது என்றாலும் அது மற்ற இனத்தவருக்குரிய பங்கையும் எடுத்துக்கொள்வதாகக் கருதப்படுகிறது.

இன்னும் சிலர், எஃப் வகுப்பு உரிமங்கள் அம்னோ தலைமைத்துவத்துக்கு நெருக்கமானவர்களுக்கே வழங்கப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

TAGS: