இந்நாட்டு சட்ட ஒழுங்கைப்பற்றி இங்கிலாந்தில் பிரதமர் உரை நிகழ்த்தியுள்ளார். ஆனால், அவரும், அவர் கட்சிக்கார்களும், அவரின் அரசாங்கமும் சட்ட ஒழுங்கை சரிவரக் கடைப்பிடிக்கிறதா என்று எண்ணி பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பெர்சே தலைவர் அம்பிகா வீட்டின் முன் பெர்கர் கடை நடத்துவதும், துணை ஐ.ஜி.பி தோசை கடை வைக்கலாம் என்று ஆமோதிப்பதும், பிரதமர் அலுவலகத்தின் முன்பு, பொது மக்களை அடியாட்களை வைத்து தாக்குவதும் எந்த நாட்டில் நடக்கும் என்று வினவினார்.
பிரதமரும் போலீசாரும் சட்ட ஒழுங்கை கடைபிடிக்கும் பாணியே தணி சிறப்புக்குறியது என்பதை நாடு அறியும் என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டில் சட்ட ஒழுங்கை பிரதமர் பேணும் பாணியை நாட்டு மக்கள் நன்கு அறிவர் என்பதனை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும். பெர்சே விவகாரத்தை தரம்தாழ்த்தி பாரிசான் தலைவர்கள் வெளிநாட்டில் பேசலாம், மக்களைத் தேச விரோதிகளாகச் சித்தரிக்கலாம், ஆனால் பெர்சே தலைவர்கள் பேரணிக்கான விளக்கத்தை வெளிநாடுகளில் வாழும் மலேசியர்கள் அறிந்துக்கொள்ள வெளிநாட்டு ஊடகங்களுக்கு கொடுத்தால் அது தேசத்துரோகம் என்று பாரிசான் ஆதரவு ஊடகங்கள் ஊளையிடும் என்றாரவர்.
மலேசிய மக்கள் முன் நின்று நடத்திய ஒரு அமைதி போராட்டத்தை வெளிநாடுகளில் பிரதமரும், அவர் அமைச்சரவையும், மாசுப்படுத்த முற்பட்டிருப்பது வருந்தத்தக்கது. அண்மையில் கோலாலம்பூரில் நடந்த பெர்சே பேரணி சட்டப்படி ஒழுங்கு நிலைக்கு உட்பட்டு நடத்தப்பட்டது. ஆனால் அதனை ஒரு வன்முறை குழு எனப் படம் பிடித்துக் காட்டவேண்டும் எனப் போலீசார் உட்பட பாரிசான் ஆதரவாளர்கள் வன்முறைகளைத் திட்டமிட்டுத் தூண்டி விட்டதற்கான ஆதரங்கள் இருக்கின்றன என்று சேவியர் கூறினார்.
“ஆனால், நாட்டில் நீதியை நிலை நிறுத்த வேண்டிய பிரதமர் பொது மக்களைப் பலி சொல்லுவதும், நாட்டில் பொது நீதிக்குப் போராடும் பெர்சே தலைவர் அம்பிகா போன்றவர்களை தனியைப்படுத்தி நாசிச பாணியில் கைகூலிகளை வைத்துப் பழிவாங்கும் படலத்தைப் போலீசாரும், கோலாலம்பூர் மாநகரமன்றமும் மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
“பிரதமர் நாட்டில் நீதியை நிலை நிறுத்த, மக்களின் அடிப்படை உரிமைகளை தற்காக்க தவறி விட்டார், சுய அரசியல் குரோதத்தை முன் வைத்து மக்களைப் பழிவாங்க முற்படும் ஒருவர் எவ்வாறு நம்பிக்கையானவராக இருக்க முடியும்? இவர்களிடம் மீண்டும் எப்படி இந்நாட்டை வழி நடத்தும் பொறுப்பை ஒப்படைப்பது”, என்று கேட்டார் டாக்டர் சேவியர்.
வயதானவர்கள், பெண்கள் ஏன் குழந்தைகளையும் கொண்டிருந்த பங்கேற்பாளர்களை முரட்டுத்தனமானவர்கள் எனச் சித்தரிக்க முற்படும் அரசு, முழு ஆயுதம் தரித்திருந்த போலீசாரை, அகிம்சைவதிகளாக காட்ட நினைப்பது மலேசியாவில் நடக்கும் மாபெரும் வேடிக்கையாகும். அன்று பேலீசாரின் முரட்டுத்தனத்தில் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொது மக்களுடன் ஒப்பிடும் பொழுது போலீசாரில் காயம் பட்டவர்கள் எண்ணிக்கை மிக அற்பம் என்பதனை மக்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.
பிரதமர் துறையின் அழைப்பின் பேரில் பிரதமர் இலாக்காவுக்கு சென்றவர் ஒரு பள்ளி மாணவி என்றும் பாராமல், அவரை கூட்டி சென்றவர்கள் மீது பிரதமர் அலுவலக்கத்தின் முன் பலாத்காரத்தை பயன்படுத்தும் கூட்டத்தினர் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீசாரும், பிரதமரும் நாட்டில் சட்ட ஒழுங்கைப்பற்றி பேச தகுதியானவர்களா? நாட்டில் சட்ட ஒழுங்கு எவ்வளவு சீர் குலைவுக்கு மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டு இருக்காமல், புத்ரா ஜெயா கைகலப்பு மீதும், பெர்சே பேரணியில் போலீசார் அத்து மீறல் குறித்தும், அம்பிகா வீட்டில் இடையூறுகளை ஏற்படுத்திவரும் தரப்பினர் மீதும் பிரதமர் உடனடி நடவடிக்கை நாட்டில் சட்ட விதிகளை பிரதமர் காக்க வேண்டும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.