சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையத்தின் குழுவைச் சந்தித்த பின்னர் ஆறு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (இசா) கைதிகள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நிறுத்திக் கொண்டனர்.
அவர்களில் நால்வர் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம் இருந்ததாகவும் மேலும் இருவர் மே 16ம் தேதி தொடங்கியதாகவும் சுஹாக்காம் ஆணையர் ஜேம்ஸ் நாயகம் கூறினார்.
மற்ற நான்கு கைதிகள் மே 12ம் தேதி தங்களது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“இசா சட்டம் ரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என நம்பியதால் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.”
“ஆனால் இன்று அவர்களுக்குப் புதிய சட்டத்தின் 32வது பிரிவை நாங்கள் விளக்கினோம். அந்தக் கைதிகள் கைது செய்யப்பட்ட போது வெளியிடப்பட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள தடுப்புக் காவல் காலத்தில் எஞ்சியுள்ள காலத்திற்கு அவர்கள் தடுப்புக் காவலை அனுபவித்தாக வேண்டும் என அந்தப் பிரிவு கூறுகிறது.”
“எங்களுடன் நண்பகல் உணவை உட்கொண்டு தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள அந்தக் கைதிகள் முடிவு செய்தார்கள்,” என்றும் ஜேம்ஸ் சொன்னார்.
இன்னும் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படாத 2012ம் ஆண்டுக்கான பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) மசோதாவின் 32வது பிரிவின் கீழ் இசா-வின் கீழ் வெளியிடப்பட்ட எந்த ஆணையும் உள்துறை அமைச்சர் முன்கூட்டியே ரத்துச் செய்தால் தவிர இசா ரத்துச் செய்யப்படுவதால் பாதிக்கப்பட மாட்டாது.
அந்தத் தடுப்புக் காவல் முகாமுக்கு சுஹாக்காம் குழுவுடன் சென்ற உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் அந்த விதிமுறை குறித்து மூவர் கொண்ட சுஹாக்காம் குழுவுக்கும் கைதிகளுக்கும் விளக்கமளித்தார்.
சிறைச்சாலைத்துறை, போலீஸ் ஆகியவற்றின் பேராளர்களும் சுஹாக்காம் குழுவுடன் சென்றிருந்தனர்.
பேராக் கமுந்திங்கில் உள்ள அந்தத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 45 கைதிகளில் 12 பேர் இவ்வாண்டும் 22 பேர் அடுத்த ஆண்டும் 11 பேர் 2014ம் ஆண்டும் விடுவிக்கப்படுவர். கடைசி கைதி 2014ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி விடுதலை செய்யப்படுவார்.
அந்தக் கைதிகள் செய்ததாகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் குற்றம் சாட்டப்பட மாட்டாது என சுஹாக்காமுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர்
உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியவர்களில் ஒருவர் மலேசியர், இன்னொருவர் இந்தோனிசியர், ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர், மற்றவர்கள் இலங்கை குடிமக்கள் என்றும் ஜேம்ஸ் தெரிவித்தார்.
“நாங்கள் சுஹாக்காமுக்கு அறிக்கை ஒன்றைச் சமர்பிப்போம். உள்துறை அமைச்சரையும் தூதரகங்களையும் சந்திக்க முயலுவோம். நாங்கள் புதிய தகவல்களுடன் இரண்டு வாரங்களில் மீண்டும் அந்த முகாமுக்குத் திரும்புவோம்,” என்றார் அவர்.
மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுக்கள், ஜெம்மா இஸ்லாமியா, டாருல் இஸ்லாம், ஜெம்மா சாண்டிரி மிலாயு ஆகியவற்றில் சம்பந்தப்பட்டது, பத்திரங்களை போலியாக தயாரித்தது ஆகியவற்றுக்காக அந்த 45 கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளின் உடல் நிலை பற்றிக் குறிப்பிட்ட ஜேம்ஸ், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அன்றாடம் மருத்துவக் கவனிப்பைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.
“அவர்களை மருத்துவர்கள் அன்றாடம் சோதித்தனர். சிறைக்காவலர் அன்றாடம் மூன்று முறை அவர்களை சோதனை செய்துள்ளார். அவர்களுக்கு மருத்துவக் கவனிப்பும் வழங்கப்பட்டது.”
“சிறைச்சாலைத்துறையின் பேராளர் ஒருவரும் அவர்களுடன் ஒரு வாரத்திற்கு இருந்துள்ளார்,” என்றும் அவர் தெரிவித்தார்.
எல்லா 45 கைதிகளுடனும் ஒரு மணி நேரத்தை சுஹாக்காம் குழு செலவிட்டதாகவும் முகாமில் சூழ்நிலைகள் நன்றாக இருப்பதாகவும் கைதிகள் தெரிவித்தனர் என்றும் ஜேம்ஸ் சொன்னார்.
“அந்த முகாம் சூழ்நிலை நன்றாக இருக்கிறது என அவர்கள் கூறினார். ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறித்து புகார் செய்தனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.