கெராக்கானில் உள்ள ‘வயதான தலைவர்கள்’ 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதினின்றும் ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அக்கட்சிக்குள் உருவாகியுள்ள கெராக்கான்லா கெராக்கான் (ஜிஜி) என்னும் மறுமலர்ச்சி இயக்கம்,பல்லாண்டுக் காலம் பணியாற்றிய மூத்த தலைவர்கள் கட்சியின் ஆலோசகர்களாக மாறுவது நல்லது எனக் குறிப்பிட்டது.
“லிம் சொங் இயு கெராக்கான் தலைவர் பதவியிலிருந்து விலகியதும் நல்ல ஆலோசகராக இருந்தார்.அவரைப்போலவே நடப்புத் தலைவர் கோ சூ கூன்னும் மாநிலத் தலைவர் டாக்டர் தெங் ஹொக் நானும் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்”, என ஜிஜி-இன் பேச்சாளர் இயப் பான் சூன் தெரிவித்தார்.
தேர்தல் பரப்புரையின்போது புதிய மாநில பிஎன் தலைவரான தெங் சாங் இயோ கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பது நல்லதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கெராக்கான் உறுப்பினர்கள் மூத்த தலைவர்கள் விட்டுச் செல்லும் பொறுப்புகளை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்.அதேபோல் புதியவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கவும் துணிய வேண்டும்.
“புதிய இரத்தத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கமும் கூடாது பாரபட்சமும் கூடாது”, என்று இயப்(இடம்) கூறினார்.இயப் அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே 3.0பேரணியில் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“எடுத்துக்காட்டுக்கு பிரதமர் நஜிப் ரசாக், பினாங்கு பிஎன்னுக்கு ஒரு போராளியைத் தலைவராக நியமித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”, என்றவர் சொன்னார்.
1969-இல் கெராக்கான் மிகப் பெரிய ஆதரவைப் பெற்று பினாங்கு சட்டமன்றத்தில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியதை நினைவுறுத்திய இயப், அதுபோன்ற உணர்வைப் பெற மிகப் பெரிய ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அடுத்த கட்சித் தேர்தலில் கட்சியின் மேலிடம் பல்லின தோற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
“மலேசியர்களுக்காகத்தான் பாடுபடுகிறோம்.ஆனால், நடப்பில் கெராக்கானில் சீனர்கள்தாம் அதிகம் உள்ளனர்.கட்சியை நேசிப்பவர்களாக இருந்தால் நாம் மாற வேண்டும்.கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது.
“இலவசங்களையும் பணத்தையும் கொடுப்பதற்குப் பதில் தொழில்திறன்களைக் கற்றுக்கொடுக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, சமைக்கவும் சமைத்ததை விற்பனை செய்யவும் கற்றுக்கொடுத்தால் அது அவர்கள் உணவு தயாரித்து பரிமாறும் தொழிலில் ஈடுபட உதவியாக இருக்கும்”, என்றவர் கூறினார்.