புக்கிட் ராஜா நில விவகாரம்: குற்றச்சாட்டை நிரூபிக்க சிவசுப்ரமணியத்திற்கும் தமிழ் நேசனுக்கும் ஒரு வாரம்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்,விடுத்துள்ள அறிக்கை:

கிள்ளான், ஜாலான் மேருவிலுள்ள புக்கிட் ராஜா தோட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தொழிலாளர்களுக்காக மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டம் தொடர்பில் சிலாங்கூர் மாநில மக்கள் கூட்டணி அரசாங்கத்தை கடுமையாகச் சாடி மஇகாவைச்  சேர்ந்த எல். சிவசுப்பிரமணியம் என்பவர்  கடந்த 17 தேதி தமிழ் நேசன் நாளேட்டில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

மேம்பாட்டுத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட புக்கிட் ராஜா தோட்டத்தைச் சேர்ந்த 144 தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக தேசிய முன்னணியினால் ஒதுக்கப்பட்ட 15 ஏக்கர்  நிலத்தின் ஒரு பகுதியில் அதாவது எட்டு ஏக்கரில் ஆடம்பர வீடுகளைக் கட்ட மேம்பாட்டு நிறுவனத்திற்கு டாக்டர் சேவியர் மற்றும் சிலாங்கூர் மாநில மக்கள் கூட்டணி உடந்தையாக இருப்பதாக அவர் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார். 
 

சிலாங்கூர் மாநில மக்கள் கூட்டணி அரசு மற்றும் எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் குரோத எண்ணத்துடனும் உள்நோக்கத்துடனும் எந்தவொரு அடிப்படை ஆதாரமுமின்றி அச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பதை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
 

அந்தச் செய்தி முழுக்க முழுக்க உண்மைக்கு மாறான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், அந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் மக்கள் கூட்டணி தோட்டப்பாட்டாளிகளுக்கு துரோகம் இழைத்து விட்டது போன்றும் நிலத்தை திருட உடந்தையாக இருந்ததைப் போன்ற தோன்றத்தை ஏற்படுத்துகின்றன.
 
அச்செய்தியில் வலிந்து திணிக்கப்பட்டுள்ள  “துரோகம்”, “திருட்டு”, “மோசடி” போன்ற வார்த்தைகள் கடுமையானதாகவும் மக்கள் கூட்டணி அரசாங்கம்  மற்றும் அதன் தலைவர்களின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையிலும் உள்ளன.
 

மஇகாவும் தேசிய முன்னணி அரசாங்கமும் கடந்த 2007ஆம் ஆண்டில் அந்த நிலத்தை தோட்டப்பாட்டாளிகளுக்கு வழங்கியதாக சிவசுப்பிரமணியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் அந்த நிலத்தின் உரிமையாளர் மஇகாவா? அல்லது மேம்பாட்டு நிறுவனமா?  தோட்டப்பாட்டாளிகளின் வீடமைப்புத் திட்டத்திற்கு 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதா? இந்த நில விவகாரத்தில்  மக்கள் கூட்டணித் தலைவர்கள் தோட்டப்பாட்டாளிகளுக்கு துரோகம் செய்ததை அல்லது ஏமாற்றியதை அல்லது அவர்களின் நிலத்தை திருடியதை தக்க சான்றுகளுடன்  நிரூபிக்க முடியுமா?
மக்கள் கூட்டணிக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுகளை  சிவசுப்பிரமணியம் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க ஒரு வார கால அவகாசம் வழங்குகிறோம். தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் அவர் மாநில அரசிடமும், என்னிடமும்  பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு செய்யத்  தவறினால் சிவசுப்பிமணியம் மீதும் அச்செய்தியை வெளியிட்ட தமிழ்நேசன் பத்திரிகை மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 

 

TAGS: