குவான் எங் தமது பத்திரிக்கை சுதந்திர நடவடிக்கைகளை பட்டியலிடுகிறார்

பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றுமானால் நடப்பு ஊடகச் சூழ்நிலையை அது விடுவிக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என CIJ என்ற சுதந்திர இதழியல் மய்யம் கூறியுள்ளதை டிஏபி நிராகரித்துள்ளது.

2008ம் ஆண்டு பதவிக்கு வந்த பக்காத்தான் மாநில அரசுகளும் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட வரையில் பிஎன் -னைப் போன்ற ‘பண்புகளையே’ காட்டியுள்ளதாக தனது ஆண்டு பேச்சுச் சுதந்திர அறிக்கையில் CIJ கூறியது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பினாங்கு அரசாங்கத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் எதிர்த்தரப்புக் கூட்டணி தான் சொன்னதைச் செய்துள்ளதாக CIJ-யின் அறிக்கையை நிராகரித்த டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

“நீங்கள் பினாங்கு மாநிலத்தைப் பார்த்தால் நாங்கள் தகவல் சுதந்திரச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதும் பேச்சாளர் சதுக்கத்தை அமைத்துள்ளதும் உங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்கள் சொத்துக்களை வெளிப்படையாக அறிவித்துள்ளோம்.”

“அவை அனைத்தும் தகவல் சுதந்திரத்துக்கான நடவடிக்கைகள்,” எனப் பினாங்கு முதலமைச்சருமான லிம் கூறினார்.

அவர் நேற்று கோலாலம்பூரில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற 2012ம் ஆண்டு ஜார்ஜ் டவுன் விழாவுக்கான விவரங்களை அறிவித்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

பக்காத்தான் அதிகாரத்துக்கு வருமானால் ஒடுக்கும் நோக்கத்தைக் கொண்ட ஊடகச் சட்டங்களை ரத்துச் செய்து நடப்பு ஊடகச் சூழலில் காணப்படுகின்ற கட்டுப்பாடுகளை அகற்றும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என CIJ என்ற சுதந்திர இதழியல் மய்யம் தனது பேச்சு சுதந்திரம் மீதான 2011ம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வாடகை வீடான லிம்-மின் அதிகாரத்துவ இல்லத்தைப் புதுப்பிப்பதற்குச் செய்யப்பட்ட செலவுகள் குறித்து தகவல்களை அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா வெளியிட்ட பின்னர் அது பினாங்குச் சட்டமன்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகளை சேகரிப்பதற்கு அந்தச் சட்டமன்றம் தடை விதித்தது.

புதுப்பிக்கும் வேலைகள் ஏதும் நடைபெறவில்லை எனக் குறிப்பிட்ட அந்த ஏடு பின்னர் இந்த நாட்டில் அதிகாரத்துவ சமயமாக கிறிஸ்துவ சமயத்தை மாற்றுவதற்கு டிஏபி-யும் கிறிஸ்துவ பாதிரியார்களும் சதி செய்வதாக செய்தி வெளியிட்டது. அதனால் டிஏபி-யும் கிறிஸ்துவர்களும் ஆத்திரமடைந்தனர்.

‘அது சுய தற்காப்பு நடவடிக்கை’

அந்தச் செய்திகள் பற்றி விளக்கமளிப்பதற்காக மாநில சட்டமன்றம் நடத்திய விசாரணையில் அது கலந்து கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து உத்துசானை தடை செய்வது என சபாநாயகர் முடிவு செய்ததாக லிம் குறிப்பிட்டார்.

“உத்துசான் ஒரு செய்திப் பத்திரிக்கை அல்ல. ஒர் அரசியல் கட்சியின் குரலாகும்,” எனக் கூறிய லிம், தமக்கு எதிராக சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் உரிமையைத் தரவும் அந்த ஏடு மறுத்து விட்டதாகவும் சொன்னார்.

“நான் அன்றாடம் அவர்கள் மீது வழக்குப் போட முடியுமா ? அன்றாடன் அவர்கள் னீது வழக்குப் போடுவதற்கு எனக்கு ஆற்றலோ, திறமையோ, நிதி வளங்களோ இருக்கின்றனவா ? என்னிடம் இல்லை.” “நான் யார் ? நான் பினாங்கு முதலமைச்சர். அவர்கள் யார் ? அவர்கள் பெரியவர்கள். அவர்களுக்கு பின்னால் அம்னோ நிற்கிறது. அவர்களிடம் பணம் இருக்கிறது. மில்லியன் கணக்கான ரிங்கிட்டை அவர்கள் வீச முடியும் அவர்கள் உங்களைக் கண்டு அஞ்சவில்லை. நிச்சயமாக என்னைக் கண்டு அல்ல,” என்றார் லிம்.

தமது நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதிலிருந்து உத்துசானைத் தடை செய்வதைத் தவிர தமக்கு வேறு வழி இல்லை என்றும் சுய தற்காப்பு நடவடிக்கையே அது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அது சுய தற்காப்பு நடவடிக்கை. “தயவு செய்து என்னைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்க வேண்டாம். என் செய்திகளை அச்சிட வேண்டாம். எனக்கு சரிதான். காரணம் நான் அவர்களைக் கண்டு பயப்படுகிறேன்,” என்றார் லிம்

 

TAGS: