கட்டணத்தைக் குறைப்பீர்: டெல்கோவுக்கு எம்டியுசி கோரிக்கை

மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி), தொலைத்தொடர்பு நிறவனங்கள் அவற்றின் சேவையைத் தரத்தை உயர்த்தி கட்டணங்களைக் குறைக்க வேண்டுமே தவிர 6 விழுக்காடு சேவை வரி என்று மக்களின் சுமையை அதிகரிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த வரியை அவர்களே ஏற்றுகொண்டு அதன் பின்னரும்கூட மிகப் பெரிய அளவில் ஆதாயம் காண முடியும் என்கிறபோது அதைப் பயனீட்டாளர்மீது திணிப்பது அநியாயம் என்று அதன் உதவித் தலைவர் ஏ.பாலசுப்ரமணியம் கூறினார்.

வியாழக்கிழமை தொடங்கி, முன்கட்டணம் செலுத்திப் பெறப்படும் கைபேசிச் சேவைகளுக்கான 6 விழுக்காட்டு சேவை வரியைப் பயனீட்டாளர்களிடம் தள்ளிவிட டெல்கோ செய்துள்ள முடிவு குறித்து அவர் கருத்துரைத்தார்.

அந்த வரிவிதிப்புத் திட்டத்துக்கு நிதி அமைச்சு இன்னும் அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த வரி, முன்கூட்டி கட்டணம் செலுத்தி கைபேசிச் சேவையைப் பயன்படுத்தும் சாதாரண மக்களுக்குப் பெரும் சுமையாக அமையும் என்று பாலசுப்ரமணியம் கூறினார்.

“வாழ்க்கைச் செலவின உயர்வாலும் குறைந்தநிலைச் சம்பளம் உயராமல் அப்படியே தேங்கிக் கிடப்பதாலும் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு மேலும் ஒரு வரி என்பது கூடுதல் சுமையாகிவிடும்”, என்றவர் சுட்டிக்காட்டினார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள்  சமுதாயத்தின் இப்பிரிவினரின் சுமையைக் குறைக்கும் வகையில் அழைப்புக்கட்டணங்களைக் குறைத்து நல்லெண்ணத்தைக் காட்டிட வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

– Bernama

TAGS: