மலேசியர்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் என்கிறார் அம்பிகா

பெர்சே 3.0 பேரணி முடிந்து மூன்று வாரங்கள் கடந்திருக்கலாம். ஆனால் அதற்கு ஆதரவு காட்ட பெரும் எண்ணிக்கையில் வந்த மலேசியர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதற்கு இன்னும் காலம் கடக்கவில்லை என்கிறார் ஏற்பாட்டாளர்களின் கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன்.

அந்த பேரணியிலிருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்று கேட்கப்பட்டதும் மலேசியர்களைக் குறைவாக மதிப்பிட வேண்டாம் என அவர் உடனடியாகப் பதில் அளித்தார்.

பெர்சே என்பது தம்மைப் பற்றியதல்ல. உண்மையில் மக்கள் நிலையிலிருந்து எழுந்த ஒர் இயக்கமாகும் என்றார் அவர்.

“அது என்னுடையதல்ல. பாக் சாமாட் சைட்-டுடையதுமல்ல.  வருவதற்கு நாங்கள் அவர்களுக்குப் பணம் கொடுக்கவில்லை. உண்மையில் டி சட்டைகளுக்கும் போக்குவரத்துக்கும் அவர்களே செலவு செய்தார்கள். சிலர் சொந்தமாக வடிவமைத்துக் கொண்டார்கள். மக்கள் பெர்சே-யை தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள்.”

“அது மக்களுடைய எண்ணங்களை அது பிரதிபலித்தது. மலேசியர்களைக் குறைவாக மதிப்பிட வேண்டாம் என்பதே நான் பெர்சே 3.0 பேரணி மூலம் கற்றுக் கொண்ட பாடமாகும்.நாங்கள் எதிர்பார்த்ததை விட கூட்டம் மிகவும் பெரிதாக இருந்தது. நாம் சிறந்த நிலையில் தயாராக இருக்க வேண்டும்.”

“அதிகாரிகள் கட்டுப்பாடற்றவகளாக (berserk) முடியும் என்பதையும் நான் கற்றுக் கொண்டேன். அப்போது நிகழ்ந்த வன்முறைகளிருந்து இன்னும் மீளவில்லை. அரசாங்கம் தாராளப் போக்குடையதாக தெரிகிறது. இருந்தும் அவர்கள் அதனை செய்துள்ளனர்.”

:எதிர்ப்பை ஒடுக்குவதற்கு அவர்கள் எந்த அளவுக்குப் போவார்கள் என்பதே என்னுடைய அச்சமாகும். நான் அது குறித்து ஒரளவு கவலை அடைந்துள்ளேன்,” என்றார் அம்பிகா.

அந்தச் சம்பவம் மலேசியர்கள் மீதான எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளிக்கும் பொருட்டு ஒருமைப்பாட்டுடன் அவர்கள் ஒன்றாக நின்றது மிகவும் போற்றப்பட வேண்டிய குறிப்பிடத்தக்க விஷயம் என அவர் சொன்னார்.

நடந்ததற்கான பாராட்டுக்களை ஏற்காத அந்த முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவர், பெர்சே மக்களை விழித்துக் கொள்ளச் செய்துள்ளது, மக்களிடையே ஆக்கப்பூர்வமான ஒன்றை தூண்டி விட்டுள்ளது என்றார்.

“நாம் வேறுபாடுகளைத் தேடவில்லை. மாறாக பொது நோக்கத்திற்காக (தூய்மையான நியாயமான தேர்தல்கள்) நாம் ஒற்றுமையை நாடினோம். அதனை எதிர்ப்பது மிகவும் சிரமம்.”

தேர்தல் என்பது சிலருக்கு கசப்பாக இருந்தாலும் “அவர்கள் இதனை முறியடிக்க முடியாது. அவர்கள் எதிர்க்கவும் கூடாது. காரணம் இது வலிமை வாய்ந்த விவகாரம்,” என அவர் எச்சரித்தார்.

மலேசியாவில் மட்டும் பேரணி நடக்கவில்லை உலகம் முழுவதும் 80 இடங்களில் அது நடைபெற்றுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எவரஸ்ட் மலையின் அடிவார முகாமிலும் கினாபாலு மலையிலும் பெர்சே கொடிகளை வைத்தவர்களும் அவர்களில் அடங்குவர்.

முதலில் வருவதை கவனிப்போம்

பெர்சே 4.0ஐ ஏற்பாடு செய்வது பெர்சே-யின் உடனடியான கடமை அல்ல எனக் குறிப்பிட்ட அவர் பேரணியில் காயமடைந்தவர்கள் அனைவரையும் சேர்த்து ஒர் அறிக்கையைத் தயார் செய்வதே இப்போது முக்கியம் என்றார்.

“மக்கள் இன்னொரு பேரணியை நடத்த நெருக்குதல் தொடுக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நாம் இன்னும் சில வேலைகளை முடிக்கவில்லை. மக்கள் சம்பந்தப்பட்ட வன்முறைகளும் வாக்காளர் கல்வியும் அவற்றுள் அடங்கும்.காயமடைந்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவும் நாம் போராட வேண்டும்.”

காயமடைந்தவர்கள் எண்ணிக்கை பற்றிக் குறிப்பிட்ட அம்பிகா,  புகார்கள் தொகுக்கப்படுவதுடன் விடுதலைக்கான வழக்குரைஞர்கள், சுவாராம் போன்ற அரசு சாரா அமைப்புக்கள் அண்மையில் 100 பேர் காயமடைந்துள்ளதாக ஒர் அறிக்கையை சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையத்திடம் வழங்கியுள்ளன எந்த் தெரிவித்தார்.

“போலீஸ் முரட்டுத்தனம் மீது சுஹாக்காம் விரைவில் விசாரணை நடத்தும் என நாங்கள் நம்புகிறோம். பொது மக்கள் முன் வந்து தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், அத்துடன் இசி என்ற தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் பதவி துறக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகளையும் பெர்சே 3.0 தீவிரப்படுத்தி வருவதாகவும் அம்பிகா சொன்னார்.

இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்-பும் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமாரும் அம்னோ உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தமக்கு புரியவில்லை என பெர்சே கூட்டுத் தலைவர் தெரிவித்தார்.

இசி ஏன் விலக வேண்டும்?

அவர்கள் அம்னோ உறுப்பினர்களா இல்லையா என்பது நமக்குத் தெரிய வேண்டும். அது நிச்சயம் அம்னோவுக்கு தெரிந்திருக்க வேண்டும். பதில் உடனடியாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த விவகாரம் மீது ஏன் கதைகளை ஜோடிக்க வேண்டும் ? அவர்கள் உறுப்பினர்களா இல்லையா என்பது தெளிவாகக் கூறப்பட வேண்டும். அதில் இரண்டு வழிகள் இல்லை. அவர்கள் ஒர் அரசியல் கட்சியில் உறுப்பினர்கள் என்றால் அவர்கள் இசி தலைவராகவும் துணைத் தலைவராகவும் இருக்க முடியாது,” என்றார் அவர்.

ஜுலை 9 பெர்சே 2.0 பேரணி நாடாளுமன்ற தேர்வுக் குழு (பிஎஸ்சி)அமைக்கப்படுவதற்கு வழி வகுத்தது. அதில் சாட்சியமணித்த பல சிவில் சமூக அமைப்புக்கள் குறிப்பிட்ட சில சட்டங்கள் தாராளமாக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. அது அரசாங்கத்துக்கு நல்ல நடவடிக்கையாகவும் இருந்தது என அம்பிகா குறிப்பிட்டார்.

“ஆனால் நாங்கள் இன்னும் அந்தக் குழுவின் அறிக்கையைப் பார்க்கவில்லை. அதன் பரிந்துரைகளில்  பெர்சே-யின் எட்டுக் கோரிக்கைகள் அடங்கியுள்ளதாக நாங்கள் கருதவில்லை. ஆகவே பிஎஸ்சி தனது நோக்கத்தை அடைந்து விட்டதாக நாங்கள் எண்ணவில்லை.”

அப்துல் அஜிஸ், வான் அகமட் ஆகியோருக்கு எதிராகப் பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜைன் இப்ராஹிம் கேட்டுக் கொண்டது உட்பட பல்வேறு தரப்புக்களின் கருத்துக்கள் பற்றிக் குறிப்பிட்ட அம்பிகா, பெர்சே அந்த அளவுக்குச் செல்லாது என்றும் அவர்கள் இருவரும் விலகுவதோடு மற்ற இசி உறுப்பினர்களும் போக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.

“பொது மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டதால் அவர்கள் விலக வேண்டும் என நாங்கள் கோருகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் அம்னோ உறுப்பினர்கள். அதனாலும் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்,” என்றார் அவர். அத்துடன் 13வது பொதுத் தேர்தலுக்கு அனைத்துலக பார்வையாளர்கள் அழைக்கப்பட வேண்டும் என்றும் பெர்சே விரும்புகிறது.

என்றாலும் தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதாவை அரசாங்கம் மீட்டுக் கொண்டதை அம்பிகா பாராட்டினார்.

கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை

பிஎஸ்சி அமைக்கப்பட்ட பின்னர் பெர்சே கோரிக்கைகளில் எத்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், மொத்தம் எட்டுக் கோரிக்கைகளில் ஒன்று மட்டுமே அதுவும் முழுமையாக அல்லாமல்- அழியா மை மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அழியா மையைப் பயன்படுத்துவது பற்றி அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எப்படிப் பயன்படுத்தப்படும் என்பது பெர்சே-க்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அந்த மைக்குள் கைவிரல் நனைக்கப்படுமா அல்லது அதில் போடப்படுமா என்பது தெரியவில்லை.

“சுதந்திரமான நேர்மையான ஊடகங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் பத்திரிக்கைகள் கட்சி சார்பு நிலையிலிருந்து ஒரே நாளில் எப்படி கட்சிச் சார்பற்ற நிலைக்கு மாறும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.”

“அஞ்சல் வாக்காளர் பிரச்னை இன்னும் தீரவில்லை. Tindak Malaysia அந்த விஷயத்தைக் கவனித்து வருகிறது.”

“உண்மையில் எங்கள் கோரிக்கைகள் பல ஏற்றுக் கொள்ளப்படவில்லை,” என்றார் அவர்.

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிப்பது பற்றியும் அம்பிகா பேசினார். அதனை ஏன் அமலாக்க முடியாது என்பது தமக்குப் புரியவில்லை என்றார் அவர்.

இந்தோனிசியா கூட வெளிநாடுகளில் வசிக்கும் தனது குடிமக்களுக்கு வாக்குரிமையை வழங்கியுள்ளது. ஆனால் மலேசியா இன்னும் அவ்வாறு செய்யவில்லை.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குற்றம் சாட்டுவதைப் போல பெர்சே ஆர்ப்பாட்டம் சிறுபான்மையினரை பிரதிநிதிக்கிறது என்ற கருத்துக்களை அம்பிகா ஒப்புக் கொள்ளவில்லை.

“10,000 பேர் ஒரு நிலையை எடுத்தால் கூட நீங்கள் அவர்களுக்குச் செவி சாய்க்க வேண்டும். நாங்கள் சிறுபான்மையினர் என்பதால் தூய்மையான நேர்மையான தேர்தல்களுக்கான எங்கள் போராட்டம் சட்டப்பூர்வமானது அல்ல எனச் சொல்ல வருகின்றீர்களா ?”

“எங்கள் பின்னணியைப் பாருங்கள். மலேசியர்கள் அச்சத்துடன் வாழும் சூழலில் இருந்தார்கள். என்றாலும் அவர்கள் பெர்சே 2.0ல் எழுந்து நின்றனர்.

“பெர்சே 3.0 அதை விடப் பெரியது. மௌனமாக இருக்கும் பெரும்பான்மையினர் தம்மிடம் இருப்பதாக பிரதமர் சொல்கிறார். எங்களிடமும் வெளியில் வராத, மௌனமாக உள்ள பெரும்பான்மையினர் இருக்கின்றனர்.

“அவை அபத்தமான வாதங்கள். 250,000 பேர் வந்தததே நாம் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டிய விஷயமாகும். அவர்கள் அதனைச் செய்யாவிட்டால் மடத்தனமான தவறுகளை அவர்கள் செய்தவர்களாகி விடுவர்,”  என்றும் பெர்சே கூட்டுத் தலைவர் குறிப்பிட்டார்.