சாந்தி தேவி ராஜேந்திரன் (35) அவர் தம் குடும்பத்தினரோடு மூவார்,ஜொகூரில் வசித்து வருகிறார். அவரின் பிள்ளைகளான ராஜேஸ்வரன் த/பெ ராஜேந்திரன் (அ.எ: 950121-08-5557) கட்டாயத்தின் பேரில் வழங்கப்பட்ட இஸ்லாமிய பெயர் முகமட் ஹாபிஸ் @ ராஜேஸ்வரன் த/பெ ராஜேந்திரன், ஜனனி த/பெ ராஜேந்திரன் (அ.எ: 960402-01-7154) கட்டாயத்தின் பேரில் வழங்கப்பட்ட இஸ்லாமிய பெயர் ஜாய்னி @ ஜனனி த/பெ ராஜேந்திரன், ரவிவர்மன் த/பெ ராஜேந்திரன் (அ.எ: 980730-01-6685) கட்டாயத்தின் பேரில் வழங்கப்பட்ட இஸ்லாமிய பெயர் ரஸாலி @ ரவிவர்மன் த/பெ ராஜேந்திரன் ஆகியோர் சுங்கை அபோங், மூவார் தேசிய இடைநிலைப்பள்ளியில் பயின்று வரும் வேளையில் இவர்களின் தம்பி தினேஷ் குமார் த/பெ ராஜேந்திரன் (அ.எ: 990722-01-6457) முகமட் தினேஷ் @ தினேஷ் குமார் த/பெ ராஜேந்திரன் என இஸ்லாமிய அதிகாரிகளால் கட்டாயத்தின் பேரில் இஸ்லாமிய பெயர் வழங்கப்பட்டுள்ளது என்று ஹிண்ட்ராப் இளைஞர் பிரிவுத் தலைவர் எஸ்.தியாகராஜன் பிரதமர், கல்வியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எழுதிய 17.5.2012 தேதியிடப்பட்ட தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்
இக்குடும்பத்தினர் வாழ்நாள் முழுவதும் இந்துக்களாகவே வாழ்ந்து வந்தாலும் கூட, இப்பிள்ளைகள் பள்ளியில் இஸ்லாமிய சமய வகுப்பிற்குச் செல்ல கட்டாயப் படுத்தப்படுகின்றனர்.
இப்பிள்ளைகளின் தாயாரான சாந்தி தேவி ராஜேந்தினுக்கு கட்டாயத்தின் பேரில் சுரினா பிந்தி டாவூட் @ சாந்தி தேவி ராஜேந்திரன் என்று இஸ்லாமிய அதிகாரிகளினால் பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட 22.11.1995 தேதியிடப்பபட்ட ஒரு கடிதம் மூலம், சாந்தி தேவி தன் வாழ்நாள் முழுவதும் இந்துவாகவே வாழ்ந்து வருவதாகவும் இந்துவாகவே இறுதி மூச்சை விட விரும்புவதாகவும் தமது பெயர் சாந்தே தேவி ராஜேந்திரன் என்று மாற்றம் செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அக்கடிதம், தேசிய பதிவிலாகா துறையின், விபரங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் திருத்தம் செய்யும் பிரிவிற்கு 17.2.1996யில் அனுப்பப்பட்டும் இன்று வரை அவரின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சாந்தி தேவி, இந்துவான ராஜேந்திரன் த/பெ முனுசாமி (அ.எ:7538909) என்பவரை விருப்பப்படி மணந்துக் கொண்டாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு கட்டாயத்தின் பேரில் இஸ்லாமிய பெயர்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் மாறாக பிள்ளைகளின் பிறப்புப் பத்திரங்களில் அவர்களின் பெயர்களை இந்துக்களாக மாற்றிட தேசிய பதிவிலாகா மறுத்து விட்டது என்றும் அவர் மேலும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆகவே இனியும் இந்த இந்து மாணவர்களை இஸ்லாமிய சமய வகுப்பில் கலந்துக் கொள்ள வற்புறுத்தக் கூடாது என பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் பிரதமர், கல்வியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
இச்செயல் கூட்டரசுப் பிரதேச அரசியல் சாசனப் பிரிவு 11 (மதச் சுதந்திர உரிமை) மற்றும் பிரிவு 12 (3) இன் கீழ் ஒருவர் தனது சொந்த மதத்தைத் தவிர இதர மதத்தின் போதனைகளையும் அல்லது இதர மதச்சடங்கிலும் கலந்துக் கொள்ளும் அவசியம் இல்லை என்றும், 18 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளின் மதங்களை அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வழங்கும் உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
இதன் தொடர்பில், இக்குடும்பத்தினரின் மத நம்பிக்கையை மதித்து அவர்களின் பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க இம்மாணவர்களை இந்து சமய போதனை வகுப்பிற்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் உத்தரவிட வேண்டும் என்றும் தியாகராஜன் கேட்டுக் கொண்டார்.
எதுவாகிலும், இனி இந்த நான்கு மாணவர்களும் எக்காரணத்தைக் கொண்டும் இஸ்லாமிய சமய வகுப்பில் கலந்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவ்வாறு செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்றும் அக்கடிதத்தின் இறுதியில் மீண்டும் கோரிக்கை விடுத்தார்.