கலந்துரையாடலுக்குமுன் நிபந்தனைகளை நிறைவேற்றுக:பாஸ் வலியுறுத்து

மலாய்க்காரர் ஒற்றுமை மீது கலந்துரையாடல் நடத்துவதற்குமுன் பாஸ் விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றுவது அம்னோவுக்குக் கடினமாக இராது என்கிறார் துவான் இப்ராகிம் துவான் மான். 

கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்பதில் இரு கட்சிகளுக்கும் கருத்திணக்கம் உண்டு,ஆனால், கலந்துரையாடலுக்குமுன் நிபந்தனைகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்று பாஸ் தகவல் பிரிவுத் தலைவராக துவான் இப்ராகிம் சினார் ஹரியானிடம் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் வாக்காளர் பட்டியலைச் சீர்படுத்த வேண்டும் என்பது நிபந்தனைகளில் ஒன்று.

பெர்னாமா சனிக்கிழமை, பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், அம்னோ இஸ்லாத்தை பிரதிபலிக்கும் வகையில் கொள்கைகளை மாற்றிக்கொண்டால் அதனுடன் பேச்சுகள் நடத்தத் தயார் என்று மொழிந்ததாக  அறிவித்திருந்தது.

கிளந்தான் அம்னோ தொடர்புக்குழுத் தலைவரான முஸ்தபா முகம்மட், கலந்துரையாடல் நடத்துவது “நல்ல யோசனைதான்” என்று வரவேற்றார். ஆனால், அதற்கு முன்நிபந்தனை விதிப்பதுதான் அவருக்குப் பிடிக்கவில்லை.

“(சமூகத்தின்)ஒற்றுமையும் நலமும்தான் நோக்கம் என்றால் அந்த நோக்கத்துக்குத் தடையாக இருக்கும் நிபந்தனைகளைப் போடக்கூடாது”, என்றாரவர்.

TAGS: