புக்கிட் குளுகோரில் போட்டியிட வாரீர்: தெங்குக்கு கர்பால் சவால்

டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வருமாறு பினாங்கு மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயோவுக்கு வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார்.

புக்கிட் குளுகோர் நடப்பு எம்பியான கர்பால், தெங்,(பாகானில்) டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கையும் (தஞ்சோங்கில்) மாநில டிஏபி தலைவர் செள கொன் இயோவையும்  எதிர்த்துப் போட்டியிடுவதில் ஆர்வம் கொண்டிருப்பதுபோலத் தெரிகிறது என்று கூறினார்.

“அதனால் புக்கிட் குளுகோரில் வந்து போட்டியிடுமாறு அவருக்குத் திறந்த அழைப்பை விடுக்கிறேன்”, என்றார்.

தெங்கின் பெயரைக்கூட சரியாகச் சொல்லத் தெரியவில்லை கர்பாலுக்கு. “சாங்” என்றுதான் முதலில் குறிப்பிட்டார்.

“பாருங்கள், அவருடைய பெயர்கூட நினைவில் இல்லை”, என்று கூறியவர் அதன்பின் கெராக்கான், மசீச,மஇகா ஆகியவற்றைச் சாடினார்.

“கடந்த தேர்தலில் அவை அழிக்கப்பட்டது மட்டுமில்லை, அடியோடு செத்தும் போய்விட்டன. இந்தத் தேர்தலுக்கு சவக்குழியிலிருந்து விழித்தெழுந்து அவை வரக்கூடாது.”

கர்ப்பாலின் அழைப்புக்கு உடனடி எதிர்வினையாற்றிய தெங், “அவருடைய பெரிய மனத்துக்கு நன்றி. ரொம்ப அன்புள்ளவராக இருக்கிறாரே”, என்று மட்டும் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.

பினாங்கில், 13வது பொதுத் தேர்தலுக்கான டிஏபி தேர்தல் இயந்திர ஒன்றுகூடல் நிகழ்வுக்காகக்  கூடியிருந்த சுமார் ஆயிரம் ஆதரவாளர்களிடையே உரையாற்றியபோது கர்பால் அச்சவாலை விடுத்தார்.

அந்நிகழ்வில், 2008 பொதுத் தேர்தலில் டிஏபி வென்ற ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் 19 சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளிடம் கட்சிக் கொடிகள் வழங்கப்பட்டன.

நான் நம்புகிறேன் (kupercaya) என்ற தலைப்பில் இசை வீடியோ குறுவட்டும் வெளியிடப்பட்டது.

கட்சித் தலைவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த எட்டு போர் முரசங்களைத் தட்டி உரத்த ஒலி எழுப்பி டிஏபி போருக்கு ஆயத்தமாகி விட்டதை பிஎன்னுக்கு அறிவித்துக் கொண்டார்கள்.

1966-இல் கட்சி உருவாக்கப்பட்டதிலிருந்து கட்சி பல களங்களைக் கண்டுவிட்டது என்று கூறிய கர்பால் “முடிவில் போரில் வெற்றி பெற வேண்டும், அதுதான் முக்கியம்” என்றார்.

“பினாங்கு டிஏபிக்கு முக்கியமான இடமாகும்.இங்கு அது பல கடுமையான சண்டைகளைப் போட்டதுண்டு. முடிவில் 2008-இல் பக்காத்தான் உதவியுடன் இம்மாநிலத்தைக் கைப்பற்றியது.”

TAGS: