பெர்சே: எங்களைப் பயமுறுத்திப் பணிய வைக்க முடியாது

ஒழுங்கான, நியாயமான தேர்தல்களுக்கு அறைகூவல் விடுக்கும் கூட்டமைப்பான பெர்சே-இன் தொடர் விளக்கமளிப்புக் கூட்டங்கள் திட்டமிட்டபடி நாடு முழுக்க தொடர்ந்து நடக்கும்.  கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என அண்மையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவை தொடர்ந்து நடக்கும் என அக்கூட்டமைப்பின் இணைத்தலைவர்  அம்பிகா ஸ்ரீநிவாசன் இன்று கூறினார்.

“என்னைக் குறிவைத்தே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.ஆனால், எந்த மாற்றமுமில்லை. எங்கள் இயக்கத்தின் நோக்கமே வாக்காளருக்குக் கல்வி புகட்டுவதுதான்.அது தொடரும்”, என்றாரவர்.

கடந்த சனிக்கிழமை, மெர்லிமாவ் நிகழ்வில் அவர் கலந்துகொள்வதை எதிர்த்து சில தரப்பினர் போலீசில் புகார் செய்ததால் அவர் அந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார்.

பின்னர் ஆத்திரம் கொண்ட ஒரு கும்பல்,கூட்டத்தில் கலந்துகொண்ட டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரையும் ஆதரவாளர்களையும் முட்டைகளையும் கற்களையும் கொண்டு தாக்கியது.

“இவையும்கூட வாக்காளருக்குக் கல்வி புகட்டும் செயல்கள்தாம் .இவை, இப்படிப்பட்ட மலேசியாவில்தான் வாழ விரும்புகிறோமா என்ற கேள்வியை வாக்காளர் மனத்தில் எழுப்பும்.அதன்வழி எப்படிப்பட்ட அமைப்புக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யவும் தூண்டுதலாக இருக்கும்”, என்றார்.

முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவரான அம்பிகா, தேர்தல் நடைமுறைகளைச் சீர்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2011 ஜூலை 9-இலும்,இவ்வாண்டு ஏப்ரல் 28-இலும் இரு மாபெரும் பேரணிகளை ஏற்பாடு செய்ததற்காக தொடர்ந்து குறைகூறப்பட்டு வருகிறார்.

மே 10-இல், ஏப்ரல் 28 பேரணியால் தங்களுக்கு பண இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் சிறு வணிகர்கள் சிலர் அவரது வீட்டுக்கு முன்புறம் பர்கர் ஸ்டால்களைப் போட்டு வியாபாரம் செய்தனர்.

கடந்த வாரம், முன்னாள் ஆயுதப்படை வீரர் சங்கத்தின் உறுப்பினர்கள் அம்பிகா மலேசியாவின் பெயரைக் கெடுத்துவிட்டார் என்று கூறி உடற்பயிற்சி செய்வதுபோல் அவரது வீட்டை நோக்கிப் பிட்டங்களை அசைத்துக் காண்பித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அம்பிகா, இவை தனிமையைக் கெடுக்கும் விவகாரங்கள் எனக் கண்டனம் தெரிவித்து போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுகொண்டபோது அதில் குற்றமில்லை என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார். 

வரும் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் 60 சிறு வணிகர்கள் அவரது வீட்டுக்குமுன் சிறு கடைகள் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.இதையும் கண்டித்த அம்பிகா இது “பயமுறுத்தும்”  நடவடிக்கை என்றார்.

கோலாலம்பூர் சிறு வியாபாரிகள் நடவடிக்கை மன்றம், பேரணியின்போது சிறுவியாபாரிகள் கடுமையான இழப்பை எதிர்நோக்கியதாக நேற்றுத் தெரிவித்தது.

இதைப் பற்றிக் கருத்துரைத்த அம்பிகா,“இதில் வேடிக்கை என்னவென்றால்-எவ்வளவு இழப்பு ஏற்பட்டது, அதன் விவரம் என்ன என்பதை இன்னமும் அவர்கள் வெளியில் சொல்லவில்லை”, என்றார். இதேபோல் கூறிய இன்னொரு தரப்பிடம்  கோரிக்கையை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் என்று கூறியிருந்தார்.

பெர்சே-இன் குறிக்கோள் தேர்தல்கள் ஒழுங்காகவும் நியாயமாகவும் நடக்க வேண்டும் என்பதுதான். இப்படிப்பட்ட செயல்களால் அந்த இலக்கிலிருந்து கவனம் விலகி விடக்கூடாது என்றவர் வலியுறுத்தினார்.

“13வது பொதுத் தேர்தல்களுக்குமுன் உருப்படியான சீரமைப்புகள் செய்யப்படுமா இல்லையா என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை”, என்றாரவர்.